UAE : வெறும் கையுடன் நாடு திரும்பும் மலையாளிகளுக்கு “Gulf Gift Box” வழங்கும் தன்னார்வ நிறுவனம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்து வந்த எண்ணற்ற இந்தியர்களில் கொரோனாவின் பாதிப்பினால் ஏற்பட்டிருக்க கூடிய தற்போதய சூழ்நிலையின் காரணமாக வேலையை இழந்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்களின் தாய் நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். இதில் குறிப்பாக வேலையை இழந்தவர்கள், வேலை தேடி வந்தவர்கள் என எண்ணற்ற மலையாளிகள் இந்தியாவிற்கு திரும்பி வருகின்றனர்.
இவ்வாறு செல்ல கூடிய மலையாளிகளுக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தை சார்ந்த தன்னார்வ நிறுவனம் ஒன்று, 11 கிலோ எடை கொண்ட பரிசு பொருட்கள் அடங்கிய ஒரு “கல்ஃப் கிப்ட் (Gulf Gift Box)” பாக்ஸை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், எமிரேட்ஸ் கம்பெனி ஹவுஸ் (Emirates Company House), துவார் சென்டரின் (Twar Center) விற்பனை இயக்குநருமான ஃபரிஸ் பைசல் கூறுகையில், “வளைகுடா நாடுகளிலில் பணிபுரிபவர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு விடுமுறையில் செல்லும் போது, தங்களின் குடும்பத்தினர்களுக்கும், அன்பானவர்களுக்கும் உணவு பொருட்கள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட எண்ணற்ற பரிசு பொருட்கள் வாங்கி செல்வது தொன்றுதொட்டு கடைபிடிக்கப்படும் ஒரு வழக்கம். ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்புகளால் அவசரமாக நாடு திரும்பக்கூடியவர்களிடம் இது போன்ற பரிசுப்பொருட்களை நம்மால் காணமுடியவில்லை”.
“தங்கள் பாஸ்போர்ட்டுகளை மட்டும் கையில் வைத்துக் கொண்டு வாழ்வாதாரத்தையும் வாழ்க்கையையும் தேடி வீட்டை விட்டு வெளியேறி கடல் கடந்து வெளிநாடுகளுக்கு வந்த இந்தியர்களுக்கு, தாய் நாட்டிற்கு திரும்பும் போது கொண்டு செல்லப்படும் இது போன்ற பரிசு பொருட்களே அவர்களுக்கு மகிழ்ச்சியையும் வெற்றி பெற்ற உணர்வையும் வெளிப்படுத்தும். இங்கிருந்து கொண்டு செல்லக்கூடிய பெட்டியை தங்களின் வீட்டிற்கு சென்று மறுபடியும் திறப்பது நமக்கு ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது”.
“கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட சூழ்நிலைகளால் வெறும் கையோடு திரும்பக்கூடியவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கும் வகையில், துபாயில் உள்ள ஒரு வணிகக் குழு இதுபோன்ற 100 ‘கல்ப் கிப்ட்’ பெட்டிகளை, கடுமையான பாதிப்புக்குள்ளான, வேலைகளை இழந்து வெறும் கையோடு நாடு திரும்பக்கூடிய தகுதியான நபர்களுக்கு விநியோகிப்பதன் மூலம் இந்த பாரம்பரியத்தை உயிரோடு வைத்திருக்க திட்டமிட்டுள்ளது” எனவும் கூறியுள்ளார்.
இந்த பரிசு பெட்டியில், பால் பவுடர், பேரிச்சம்பழம், முந்திரி, பாதாம், பிஸ்தா, சாக்லேட்டுகள், குளிர்பான கலவைகள், வாசனை திரவியங்கள், சோப்புகள், நெக வெட்டி, டார்ச் லைட், வலி நிவாரண தைலம் மற்றும் டால்கம் பவுடர் ஆகிய பொருட்கள் அடங்கிய 11 கிலோ எடை கொண்ட தலா ஒரு பெட்டி வீதம், முதல் கட்டமாக 100 பேருக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் ஒவ்வொரு இந்தியர்களும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த பரிசுகளைப் பெற்றிருப்பர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், “மே 13 ஆம் தேதி புதன்கிழமை நாங்கள் இந்த முயற்சியைத் தொடங்கினோம். இதுவரையிலும் , இதுபோன்ற ஆறு பெட்டிகள், ‘வந்தே பாரத் மிஷன்’ மூலம் இயக்கப்பட்ட சிறப்பு விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்ட தகுதியான நபர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டத்தில் 100 பெட்டிகளை விநியோகிக்க திட்டமிட்டுள்ளோம். வரவிருக்கும் நாட்களில் நாங்கள் அதிகம் நபர்களுக்கு விநியோகிப்போம். இது தொடங்கப்பட்டதிலிருந்து, பல தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தேவைப்படுபவர்களுக்கு இந்த பரிசு பெட்டிகளை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “இப்போது அமீரகத்தை விட்டு வெளியேறுபவர்கள், தங்கள் பாஸ்போர்ட்டை தவிர வேறு ஒன்றும் இல்லாமல் வெளியேறுகின்றனர். அவர்களின் வீட்டில் சிறிய குழந்தைகளும் இருப்பர். தற்போது அவர்கள் வெறும் கையுடன் திரும்பிச் செல்வது மன வேதனையை தருகிறது. இதன் மூலம், அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பவும் வர தூண்டப்படுவார்கள் என்று நம்புகிறேன்” என்றும் பைசல் கூறியது குறிப்பிடத்தக்கது.