இந்திய செய்திகள்

7 நாட்கள் கட்டாய கட்டண தனிமைப்படுத்தல்.. கர்ப்பிணி உள்ளிட்டோர் வீட்டிற்கு செல்ல அனுமதி. தாயகம் செல்பவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட இந்திய அரசு..!!

வெளிநாடுகளில் இருந்து திருப்பி அனுப்பும் நடவடிக்கை மூலம் இந்தியாவிற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்படுவதாக இந்தியாவின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) இன்று மே 24 ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பின் படி முதல் 7 நாட்கள் கட்டண அடிப்படையில் நிறுவன தனிமைப்படுத்தல் மையத்திலும், அதைத் தொடர்ந்து அடுத்த 7 நாட்கள் தங்களின் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கொரோனா பரவலை தடுப்பதை உறுதி செய்யும் பொருட்டு சர்வதேச நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருகைதரக்கூடிய இந்தியர்கள் பின்பற்றவேண்டிய புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்களின் படி, இந்தியாவிற்கு வரக்கூடிய அனைத்து பயணிகளும் மேற்கண்ட விதிமுறைக்கு இணங்குவதாக ஒரு உறுதிமொழியைக் கொடுக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனிமைப்படுத்தலுக்கான இந்த புதிய அறிவிப்பில் விதிவிலக்காக, மன உளைச்சலுக்கு ஆளானவர், கர்ப்பிணி பெண், குடும்பத்தில் மரணம், கடுமையான நோய் மற்றும் பத்து வயதுக்குக் குறைவான குழந்தைகளுடன் பயணிக்கும் பெற்றோர் போன்ற நெருக்கடியில் பயணிப்பவர்கள், அவர்களின் மாநில அரசின் மதிப்பீட்டின்படி 14 நாட்களும் தங்களின் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு அனுமதிக்கப்படும் நபர்களுக்கு ஆரோக்யா சேது மொபைல் அப்ளிகேஷன் பயன்பாடு கட்டாயமாக இருக்கும் என்று அமைச்சகம் விளக்கியுள்ளது. மேலும் மாநில அரசாங்கங்கள், பயணிகள் குறித்த அவர்களின் மதிப்பீட்டின்படி தனிமைப்படுத்தலுக்கான சொந்த நெறிமுறையை உருவாக்கிக்கொள்ளலாம் எனவும் அமைச்சகம் அனுமதித்துள்ளது.

சர்வதேச நாடுகளிலிருந்து திருப்பி அனுப்பும் நடவடிக்கை மூலம் இந்தியா வரும் பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள்….

 1. பயணத்திற்கு முன்பு, அனைத்து பயணிகளும், தாங்கள் 14 நாட்கள் அதாவது, 7 நாட்கள் தங்களின் சொந்த செலவில் நிறுவன தனிமைப்படுத்தலுக்கும், அதன்பிறகு வீட்டில் 7 நாட்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்படுவோம் என உறுதி அளிக்க வேண்டும்.
 2. மன உளைச்சலுக்கு ஆளானவர், கர்ப்பிணி பெண், குடும்பத்தில் மரணம், கடுமையான நோய் மற்றும் பத்து வயதுக்குக் குறைவான குழந்தைகளுடன் பயணிக்கும் பெற்றோர் போன்ற நெருக்கடியில் பயணிப்பவர்கள், அவர்களின் மாநில அரசின் மதிப்பீட்டின்படி 14 நாட்களும் தங்களின் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
 3. பயணம் மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்த விளக்கம் சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளால் டிக்கெட்டுடன் சேர்த்து வழங்கப்படும்.
 4. அனைத்து பயணிகளும் தங்கள் மொபைல் சாதனங்களில் ஆரோக்யா சேது மொபைல் அப்ப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுவார்கள்.
 5. வெப்ப பரிசோதனைக்குப் பிறகு, அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே விமானம் அல்லது கப்பலில் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
 6. தரை வழி மார்க்கமாக வரும் பயணிகளும் மேலே உள்ள அதே நெறிமுறைக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் அறிகுறியற்றவர்கள் மட்டுமே எல்லையை கடந்து இந்தியாவுக்குள் செல்ல முடியும்.
 7. சுய அறிவிப்பு படிவம் பயணிகளால் நிரப்பப்பட்டு அதன் நகல் விமான நிலையம், துறைமுகம் மற்றும் எல்லையில் இருக்கக்கூடிய சுகாதார மற்றும் குடிவரவு அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.
 8. சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் கிருமி நீக்கம் போன்ற முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்து விமான நிலையங்களிலும் மேலும் விமானத்திற்குள்ளும் உறுதி செய்யப்படும்.
 9. விமான நிலையங்களில், சமூக தூரத்தை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உறுதி செய்யப்படும்.
 10. விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் விமானங்கள் அல்லது கப்பல்கள் போக்குவரத்தின் போது பின்பற்றப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட கொரோனா குறித்த அறிவிப்புகள் வழங்கப்படும்.
 11. விமானம் அல்லது கப்பலில் செல்லும் போது, ​​முக கவசம் அணிவது, சுற்றுச்சூழல் சுகாதாரம், சுவாச சுகாதாரம், கை சுகாதாரம் போன்ற தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விமான/கப்பல் ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் அனைத்து பயணிகளும் கடைபிடிக்க வேண்டும்.
 12. விமான நிலையம், துறைமுகம், நாட்டு எல்லையில் உள்ள சுகாதார அதிகாரிகளால் இந்தியாவிற்கு வருகைதரும் அனைத்து பயணிகளுக்கும் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
 13. பரிசோதனையில் கொரோனாவிற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்ட பயணிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதார நெறிமுறையின்படி மேற்படி மருத்துவ வசதிக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.
 14. கொரோனாவிற்கான அறிகுறிகளற்ற பயணிகள் அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொருத்தமான நிறுவன தனிமைப்படுத்தல் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.
 15. நிறுவன தனிமைப்படுத்தலுக்கு கொண்டு செல்லப்படும் பயணிகள் குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு அங்கு தங்கியிருக்க வேண்டும்.
  • கொரோனாவிற்கான லேசான அறிகுறிகள் கொண்டவர்களாக மதிப்பிடப்படுபவர்கள், 7 நாட்களுக்கு பிறகு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதற்கோ அல்லது பொது மற்றும் தனியார் கொரோனா பராமரிப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்படுவதற்கோ அனுமதிக்கப்படுவார்கள்.
  • மிதமான அல்லது கடுமையான அறிகுறிகளைக் கொண்டவர்கள் கொரோனாவிற்கான பிரத்தியேக சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள்.
 16. அறிகுறிகள் ஏதும் தென்படாதவர்கள், தங்களின் வீட்டிலேயே அடுத்த 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவும், தங்களின் ஆரோக்கியத்தை சுயமாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்படுவார்கள்.
 17. வீட்டு தனிமை படுத்தலில் இருப்பவர்களுக்கு கொரோனாவிற்கான அறிகுறிகள் வெளிப்பட்டால், அவர்கள் உடனடியாக மாவட்ட கண்காணிப்பாளருக்கோ அல்லது மாநில மற்றும் தேசிய கால் சென்டர் நம்பருக்கோ (1075) தகவல் தெரிவிக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!