நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களை தனி விமானத்தில் அனுப்பி வைக்க இந்திய அரசு அனுமதி..!!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற நாடுகளில் உள்ள நிறுவனங்கள் இந்தியாவிற்கு செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கும் தங்களின் ஊழியர்களை சார்ட்டர் விமானங்கள் எனப்படும் தனி விமானங்கள் மூலமாக இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப இந்திய அரசு அனுமதித்துள்ளதாக இந்திய துணைத் தூதர் இன்று அமீரகத்தின் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு தெரிவித்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் பிற நிறுவன ஊழியர்களை, அவர்கள் பணிபுரிந்த வெளிநாட்டு நிறுவனம் சார்பாக தனி விமானங்களில் திருப்பி அனுப்புவது தொடர்பாக இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) இன்று வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வ குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது, வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இந்தியர்களை திருப்பி அனுப்புவதற்கான இரண்டாம் கட்ட நடவடிக்கை நாளை மே 23 முடியவிருக்கும் நிலையில் MHA சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பு குறித்து துபாயில் உள்ள இந்திய துணைத் தூதர் விபுல் கூறுகையில், இந்திய அரசின் இந்த முடிவானது ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ள தங்களின் ஊழியர்களை தனி விமானத்தில் அனுப்பி வைப்பதற்காக கோரிக்கை விடுத்த பல நிறுவனங்களுக்கு வழி வகுத்துள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவிற்கு திரும்பி செல்ல காத்திருக்கும் இந்திய ஊழியர்களைக் கொண்ட பல நிறுவனங்கள் அமீரகத்தில் உள்ளன. தனி விமானங்களில் தங்களின் ஊழியர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க விரும்பும் இதுபோன்ற சில நிறுவனங்கள் இந்திய அரசின் அனுமதி பெற இந்திய தூதரகங்களை அணுகியதாகவும் விபுல் அந்த செய்தியில் தெரிவித்துள்ளார்.
நிறுவனங்களின் இந்த கோரிக்கையை, ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்திய தூதர் பவன் கபூர் அவர்களால் இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கம் இந்த புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய தூதரகம் மற்றும் துணைத்தூதரகம் வாயிலாக, அமீரகத்திலிருந்து மட்டும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்புமாறு 12,000 ஊழியர்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் விபுல் அவர்கள் கூறியதாவது, “இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தனி விமானத்திற்கான பயணச் செலவை பயணி அல்லது நிறுவன முதலாளி ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் ஐக்கிய அரபு அமீரக சட்டங்களின்படி, சொந்த நாட்டிற்கு விடுப்பில் செல்லும் ஊழியர்களுக்கு பயண டிக்கெட் வழங்குவது நிறுவனம் அல்லது ஸ்பான்சர்களின் பொறுப்பு. இதுவரை தங்களின் ஊழியர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்கள் தனி விமானத்திற்கான பயண செலவுகளை கவனித்துக்கொள்ள தயாராக உள்ளனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனங்கள் தவிர்த்து கேரளாவை சேர்ந்த KMCC எனும் கேரள முஸ்லீம் கல்ச்சுரல் சென்ட்ரல் என்ற தன்னார்வ அமைப்பின் சார்பாகவும் கேரளாவிற்கு 10 தனி விமானங்கள் (chartered flights) இயக்க அனுமதி கேட்டு கோரிக்கை வைத்திருப்பதும் இந்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இந்திய துணைத்தூதர் விபுல் கூறியது குறிப்பிடத்தக்கது.