இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் இரண்டாம் கட்ட திட்டத்தில் கழட்டிவிடப்பட்ட தமிழகம்…!!

கொரோனா வைரஸ் பரவலின் தாக்கத்தினால் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும் விமான போக்குவரத்து தடையின் காரணமாக, இந்தியாவிற்கு வர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் “வந்தே பாரத் திட்டம்” கடந்த வாரம் தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமான், குவைத், சிங்கப்பூர், மலேசியா அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.
இந்த திட்டத்திற்காக, அந்தந்த நாடுகளில் இருக்க கூடிய இந்திய தூதரகத்தின் மூலமாக தாய் நாட்டிற்கு செல்ல விருப்பம் தெரிவித்தவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களின் தேவையின் அடிப்படையில் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், மருத்துவ தேவைக்கு செல்பவர்கள், வேலை இழந்த தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் அடிப்படையில் தாய் நாட்டிற்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றது.
வந்தே பாரத்தின் முதல் வார திட்டத்தில், ஐக்கிய அரசு அமீரகம், குவைத், ஓமான், மலேசியா, சிங்கப்பூர், பங்களாதேஷ், பிலிபைன்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய ஒன்பது நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. இதில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியாவிலிருந்து தலா இரண்டு விமானங்களும், மற்ற நாடுகளிலிருந்து தலா ஒரு விமானமும் இயக்கப்பட்டன. தற்போது இந்த முதல் வாரத்திற்கான திட்டம் முடியவிருக்கும் நிலையில், இரண்டாவது கட்டமாக வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்துவருவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு அதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அரசின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த இரண்டாவது வார திட்டத்தின் அட்டவனைப்படி, இந்தியர்களை தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பும் இந்த நடவடிக்கையானது மே மாதம் 16 ஆம் தேதி முதல் தொடங்கி மே 22 ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் கட்ட நடவடிக்கையின் ஒரு வார காலத்திற்குள், வளைகுடா நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், தெற்காசிய நாடுகள், ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆப்ரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட 31 நாடுகளிலிருந்து சுமார் 25000 இந்தியர்களை அழைத்து வருவதற்கான முயற்சிகளை இந்திய அரசாங்கம் தொடங்கியுள்ளதாகவும் தெரிகிறது. இதற்காக ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களை சார்ந்த 149 விமானங்கள் ஆகாய மார்க்கமாக இந்தியாவிற்கு அழைத்து வர பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் இரண்டாம் கட்ட திட்டத்தின் அட்டவணையின் படி, 31 நாடுகளில் மேற்கொள்ளவிருக்கும் இந்த இரண்டாம் கட்ட நடவடிக்கையில் தமிழகத்திற்கு எந்த ஒரு சிறப்பு விமானமும் இயக்கப்படாதது பல்வேறு நாடுகளில் வசிக்கக்கூடிய தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
குறிப்பாக, வளைகுடா நாடுகளில் இருக்கும் எண்ணற்ற தமிழர்கள், இந்தியாவிற்கு செல்ல விண்ணப்பித்து தங்களின் பயண நாளிற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, அடுத்த ஒரு வார காலத்திற்கு வளைகுடா நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு எந்த ஒரு விமானமும் இயக்கப்பட மாட்டாது என தெளிவாக தெரிகிறது. வளைகுடா நாடுகள் மட்டுமின்றி, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்தியா செல்ல விருப்பம் தெரிவித்து ஏராளமான தமிழர்கள் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இரண்டாவது வார திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக சிறப்பு விமானங்கள் இயக்கப்படாதது வெளிநாடுவாழ் தமிழர்கள் அனைவருக்கும் பெரிய ஏமாற்றமே.
இருப்பினும், கொரோனாவின் பாதிப்பினால் வேலை இழந்தவர்கள், வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றவர்கள், வேலை தேடி வெளிநாடு சென்றவர்கள், மருத்துவ தேவைக்காக இந்தியா வர விரும்புபவர்கள், இறப்பு உள்ளிட்ட அதியாவசியத்திற்காக தாயகம் திரும்ப முற்படுபவர்கள் என உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலிருந்தும் இலட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் இந்தியா செல்ல விண்ணப்பித்திருப்பதால், அவர்கள் அனைவரையும் உடனடியாக இந்தியா அழைத்து வருவது என்பதும் சாத்தியம் இல்லாத ஒன்றே. எனினும், வரும் வாரங்களில் விமானங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை தீவிரப்படுத்துவதன் மூலம் தாயகம் செல்ல விரும்புபவர்கள் அனைவரையும் மிக விரைவில் இந்தியாவிற்கு அழைத்து செல்ல வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
The second phase of #VandeBharatMission will be launched from 16-22 May. It will bring back Indians from 31 countries. 149 flights including feeder flights will be deployed: Sources pic.twitter.com/SJYwCCpcBI
— ANI (@ANI) May 12, 2020