துபாயில் வாகனங்களுக்கான காகித பார்க்கிங் டிக்கெட்டிற்கு பதிலாக e-Parking டிக்கெட் அறிமுகம்..!! RTA அறிவிப்பு..!!
துபாயில் இருக்கும் வாகன ஓட்டிகள் பார்க்கிங் இயந்திரங்களில் புதிதாக டச் ஸ்க்ரீன் (interactive touch screen) புதுப்பிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் இனி பார்க்கிங் டிக்கெட்டுகளை தங்கள் வாகனங்களில் காட்சிப்படுத்த தேவையில்லை என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (Roads and Transport Authority,RTA) அறிவித்துள்ளது.
இது குறித்து RTA வெளியிட்ட செய்தியில் “இனி வாகனத்தின் விண்ட்ஷீல்டில் காகித பார்க்கிங் டிக்கெட்டுகள் காட்சிப்படுத்த தேவையில்லை. அதற்கு பதிலாக ஒரு டச் ஸ்க்ரீன் பொருத்தப்பட்டு பார்க்கிங் இயந்திரங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர் வாகனத்தின் தகவல்களை உள்ளிட்டு மின் டிக்கெட்டைப் (e-ticket) பெற்றுக்கொள்ளலாம். இது பயனாளியின் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்துகிறது,” என்று தெரிவித்துள்ளது.
இது RTA-வின் முக்கிய இலக்குகளான ‘ஸ்மார்ட் துபாய் மற்றும் மக்கள் மகிழ்ச்சி (Smart Dubai and People Happiness)’ ஆகியவற்றுக்கு ஏற்ப சாலை பயனாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பார்க்கிங் துறையின் ஸ்மார்ட் மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. RTA-வின் இந்த புதிய திட்டத்தை ஜனவரி மாதம் துபாய் ஊடக அலுவலகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..
மேலும் RTA, இந்த புதுப்பிக்கப்பட்ட பார்க்கிங் மீட்டர்களை (advanced parking meters) ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கி இந்த ஆண்டு இறுதி வரை பல்வேறு கட்டங்களாக நிறுவும் என்றும் தெரிவித்துள்ளது.
“காகித டிக்கெட்டின் தேவையில்லாமல் பார்க்கிங் கட்டணம் செலுத்துவதற்கான ஒரு ‘புதுமையான தீர்வாக’ இந்த திட்டம் இருக்கும்” என்று RTA முன்பு ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.
“இந்த திட்டத்தின் படி, மேம்படுத்தப்பட்ட பார்க்கிங் மீட்டர்களுடன் டச் ஸ்க்ரீன்கள் பொருத்தப்பட்டிருக்கும். இதனால் பயனாளிகள் வாகன விபரங்களை உள்ளிடவும், ஈபார்க்கிங் டிக்கெட்டுகள் பெறவும் முடியும்.”
“இது வளர்ந்து வரும் சமூகத்திற்கு அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மோட்டார் சைக்கிள்களுக்கான பார்க்கிங் கட்டணத்தையும் இந்த நவீன பார்க்கிங் இயந்திரங்களில் செலுத்தலாம்” என்றும் RTA குறிப்பிட்டுள்ளது.