ஈத் விடுமுறையை முன்னிட்டு புதிய கட்டுப்பாடுகளை விதித்த ஓமான் அரசு..!!
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமான் நாட்டில், கொரோனாவை கையாள்வதற்கான உச்சக்குழு வெளியிட்ட அறிவிப்பின்படி, ஈத் விடுமுறை நாட்களில் பெருநாள் தொழுகை மற்றும் கூட்டமாக நடைபெறும் கொண்டாட்டங்கள் போன்ற பொதுமக்கள் ஒன்று கூடும் அனைத்து நிகழ்வுகளையும் தடை செய்வதாக தெரிவித்துள்ளது.
குழுவின் இந்த முடிவுக்கு பொது மக்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றின் உறுதிப்பாட்டை கண்காணிக்கும் பொறுப்பை ஓமான் காவல்துறை மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவுகளை மீறிய அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு சில பொருளாதார மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் பொது இடங்கள், பொருளாதார மற்றும் தொழில்துறை பணியிடங்கள் மற்றும் பொது போக்குவரத்தில் முக கவசங்களை கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும்
மேலும், மக்கள் ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் பாதிப்பையொட்டி அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகளை பலர் மீறியதன் காரணமாகவே சமீபத்தில் கொரோனாவின் பாதிப்புகள் அந்நாட்டில் திடீரென உயர்ந்ததும் காரணம் என்றும் உச்சக்குழு கூறியுள்ளது. இவ்வாறு விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“சமூகத்தின் பாதுகாப்பிற்காக ரமலான் நாட்களில் மற்றும் ஈத் அல் பித்ரின் போது குடும்பங்கள் ஒன்றாக இணையும் கூட்டங்களையும் நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும்” என்று ROP (Royal Oman Police) மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.