சவூதி அரேபியா : ஈத் விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு என அறிவிப்பு..!!
கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக சவுதி அரேபியாவில் மே 23 முதல் மே 27 வரை வரவிருக்கும் ஈத் விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட இருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதுவரை, வணிக நிறுவனங்கள் இப்போது இருப்பதைப் போலவே ரமலான் மாதம் இறுதி வரை செயல்படும் என்றும், மேலும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் மக்காவை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் மக்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெளியே செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா கொரோனாவின் பாதிப்பையொட்டி விதித்திருந்த நாடு முழுவதுமான ஊரடங்கு உத்தரவை ரமலானை முன்னிட்டு ஏப்ரல் 26 ம் தேதி முதல் தளர்த்துவதாக
ஏற்கெனவே அறிவித்திருந்தது. இருப்பினும் அதில் முழுஊரடங்கு விதிக்கப்பட்ட மக்கா மற்றும் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்ட சுற்றுப்புறங்களில் விதிக்கப்பட்டிருந்த லாக்டவுன் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதுவரையிலும், சவூதி அரேபியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,925 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 264 ஆகவும் உள்ளது. வளைகுடா நாடுகளிலே சவூதி அரேபியாவில்தான் கொரோனாவால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.