அமீரக செய்திகள்

ஷார்ஜாவில் வணிக நிறுவனங்களை மீண்டும் திறக்க அனுமதி..!! பின்பற்றவேண்டிய விதிமுறைகள் என்ன..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் ஷாப்பிங் மால்கள், ஆண் மற்றும் பெண் சிகை அலங்கார நிலையங்கள், உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகள் உள்ளிட்டவை வரும் ஞாயிற்றுக்கிழமை மே மாதம் 3 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுவதாக ஷார்ஜாவின் பொருளாதார மேம்பாட்டுத் துறை (Sharjah of Economic Development Department – SEDD) நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. மேலும் இந்த முடிவு உயர் உத்தரவுகளுக்கு இணங்க எடுக்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

கொரோனாவிற்காக மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை எளிதாக்குவதன் ஒரு பகுதியாக வணிக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படுவதாகவும், எனினும் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து வணிக மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களும் தங்களின் நிறுவனங்களில் 30 சதவீத அளவில் மட்டுமே ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை அனுமதித்தல், அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கையை அறிவிக்க வளாகத்தின் நுழைவாயிலில் அறிவிப்பு பலகைகளை நிறுவுதல், மற்றும் தனிநபர்களுக்கிடையில் குறைந்தது இரண்டு மீட்டர் தூரத்திற்கு சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நிபந்தனைகளை அனைத்து நிறுவனங்களுக்கும் தெரிவிக்கும் வண்ணம் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதாக ஷார்ஜாவின் பொருளாதார மேம்பாட்டுத் துறையை சார்ந்த ஒரு அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்..

ஷார்ஜா முனிசிபாலிட்டியின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பில், ஷார்ஜாவின் வர்த்தக கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு குழுக்கள் இந்த நிபந்தனைகள் முறையே கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யும்.என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களின் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக மால்கள் மற்றும் வணிக மையங்களின் அனைத்து நுழைவாயில்கள் மற்றும் கதவுகளைத் திறப்பதும் மேற்கூறப்பட்ட நிபந்தனைகளில் அடங்கும் என்றும் பொருளாதார மேம்பாட்டுத் துறையை சார்ந்த அந்த அதிகாரி தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மால்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்

 • 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வணிக மையங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
 • மால்களின் கார் பார்க்கிங் இடங்களில், மொத்த எண்ணிக்கையில் 30 சதவீத அளவு மட்டுமே பார்க்கிங் செய்ய அனுமதிக்க வேண்டும்.
 • வேலட்-பார்க்கிங் மற்றும் கார் கழுவுதல் போன்ற சேவைகள் இடைநிறுத்தப்பட வேண்டும்.
 • வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகளை கட்டாயம் அணிய வேண்டும். மேலும் கொரோனாவிலிருந்து பாதுகாப்பது குறித்து ஊழியர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.
 • வணிக வளாகங்கள் மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்க வேண்டும். உணவு கடைகள், பல்பொருள் அங்காடிகள், ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் மருந்தகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கலாம்.
 • வணிக வளாகங்களின் நுழைவாயில்களில் உடல் வெப்ப நிலையை கண்டறிய வெப்பத்தை அளவிடும் கருவிகள் மற்றும் ஸ்டெர்லைசர்களை நிறுவ வேண்டும். மேலும் கொரோனா தொற்று தொடர்பான ஏதேனும் அறிகுறிகளுடன் எவரேனும் கண்டறியப்பட்டால் உடனடியாக திறமையான அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
 • கழிவறைகள், லிஃப்ட், படிக்கட்டுகள் மற்றும் தளங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தொடர்ந்து கிருமி நீக்கம் செய்ய அனைத்து வணிக மையங்களிலும் கிளீனர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
 • வர்த்தக மையங்கள் மற்றும் கடைகளுக்குள் நுழையும்போது கைகளின் பயன்பாட்டைக் குறைப்பதை உறுதி செய்யும் மின்னணு கதவுகளைப் பயன்படுத்த விற்பனை நிலையங்கள் அனுமதிக்க வேண்டும்.
 • உணவகங்களில் அமர்ந்து உணவு உண்பதற்கான இருக்கைகள் மற்றும் மேசைகள் 30 சதவீத அளவிற்கே அனுமதிக்க வேண்டும். மேலும் இருக்கைகளுக்கு இடையே இரண்டு மீட்டருக்கும் குறையாமல் இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
 • உணவகங்களிள் ஒரே மேசையில் அமர்ந்து உண்பவர்களின் எண்ணிக்கை நான்கு பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 • வணிக நிறுவனங்களின் மேலாளர்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் தொடர்ந்து தங்களின் கடைகளை சுத்திகரிப்பு செய்வதை உறுதி செய்ய வேண்டும். மேலும் தங்கள் ஊழியர்கள் அனைவரையும் முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணியவும், அவற்றை தொடர்ந்து மாற்றவும் கட்டாயப்படுத்த வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை அனைத்து வணிக நிறுவனங்களும், கடைகளும் கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக, ஞாயிற்றுக்கிழமை மே 3 முதல், ஷார்ஜாவின் பொருளாதார மேம்பாட்டுத் துறை மற்றும் ஷார்ஜா முனிசிபாலிட்டி இத்தகைய நிறுவனங்களை குறிவைத்து தீவிரமான ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!