ஈத் விடுமுறை நாட்களையொட்டி அமீரகத்தில் தேசிய சுத்திகரிப்பு திட்ட நேரம் மாற்றியமைப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தேசிய அளவிலான சுத்திகரிப்பு திட்டமானது வரும் மே மாதம் 20 ஆம் நாள் முதல் இரவு 8 மணியிலிருந்து தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும் என்று ஐக்கிய அரபு அமீரக அரசு தற்போது அறிவித்துள்ளது. மேலும் அரசின் மறு உத்தரவு வரும் வரையிலும் இதே நிலை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. ரமலான் மாதம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இந்த தேசிய அளவிலான சுத்திகரிப்பு திட்டமானது இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பிறை பார்க்கப்படுவதன் அடிப்படையில் மே 22 அல்லது 23 ஆம் தேதி ஈத் விடுமுறை நாட்கள் தொடங்கவுள்ள நிலையில், பொதுமக்களுக்கு இடையே இடைவெளியை உண்டாக்கும் அடிப்படையிலும் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈத் விடுமுறை நாட்களில் ஷாப்பிங் மால்கள் மற்றும் ஷாப்பிங் மையங்கள் அனைத்தும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்றும், கொரோனவிற்கான முன்னெச்சரிக்கை நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈத் விடுமுறை நாட்களுக்கு பிறகு ஷாப்பிங் மையங்கள் மற்றும் ஷாப்பிங் மால்களுக்கு புதிய நேரங்கள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரங்களில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கலாம் எனவும் கசாப்புக் கடை, காய்கறி மற்றும் பழக்கடைகள், இறைச்சிக் கூடங்கள், மீன் விற்கும் விற்பனை நிலையங்கள், ஆலைகள், மிட்டாய் கடைகள் போன்றவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.