28 நாடுகள்.. 106 விமானங்கள்.. 25,000 பேர்.. இரண்டாவது வாரத்திற்கான இந்தியாவின் மெகா திட்டம் ரெடி..!!
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும் விமான போக்குவரத்து தடையின் காரணமாக இந்தியாவிற்கு வர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் “வந்தே பாரத் திட்டம்” கடந்த வாரம் தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமான், குவைத், சிங்கப்பூர், மலேசியா அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்து செல்லப்பட்டு வருவது நாம் அறிந்ததே.
இந்த திட்டத்திற்காக, அந்நாடுகளில் இருக்க கூடிய இந்திய தூதரகத்தின் மூலமாக தாய் நாட்டிற்கு செல்ல விருப்பம் தெரிவித்தவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களின் தேவையின் அடிப்படையில் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், மருத்துவ தேவைக்கு செல்பவர்கள், வேலை இழந்த தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் அடிப்படையில் தாய் நாட்டிற்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இந்த வந்தே பாரத் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக, வெளிநாடுகளில் இருக்கும் இந்திய குடிமக்களை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அடுத்த ஒரு வாரத்திற்கான அட்டவனை தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் படி, இந்த இரண்டாம் கட்ட திட்டத்தின் மூலம் 28 நாடுகளிலிருந்து சுமார் 25000 இந்தியர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வர இருப்பதாகவும், இந்த திட்டத்திற்காக ஏர் இந்தியா நிறுவனத்தை சார்ந்த 106 விமானங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த இரண்டாவது திருப்பி அனுப்பும் நடவடிக்கை வரும் மே மாதம் 16 ஆம் நாள் தொடங்கி மே 22 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகங்கள் இனைந்து மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டாம் கட்ட நடவடிக்கையின் படி, வளைகுடா நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், தெற்காசிய நாடுகள், ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆப்ரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட 28 நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் அழைத்து வரப்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தியர்கள் அதிகம் வசிக்கும் வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், கத்தார், ஓமான், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எந்தெந்த மாநிலங்களுக்கு எத்தனை விமானங்கள் இயக்கப்படும் என்ற அதிகாரபூர்வ தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு விமானங்களில் பயணிகள் ஏறுவதற்கு முன்பு, இந்தியாவிற்கு வரும் அனைத்து நபர்களும் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து அதன் நகல்களை சுகாதார மற்றும் இமிகிரேஷன் கவுண்டருக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பயணிகள் காய்ச்சல், இருமல், நீரிழிவு நோய் அல்லது ஏதேனும் சுவாச நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை அவர்கள் அந்த படிவத்தில் குறிப்பிட வேண்டும் எனவும் கடந்த வாரம் அமைச்சகத்தின் சார்பாக வெளியிடப்பட்டிருந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. இது போன்ற சுகாதார நடவடிக்கைகளே இந்த முறையும் பின்பற்றப்படும் எனவும் நம்பப்படுகிறது.
மேலும் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்கள் படி, விமானங்களில் பயணிக்க இருக்கும் அனைத்து பயணிகளும், விமானங்களில் ஏற அனுமதிக்கப்படுவதற்கு முன்பு கொரோனாவிற்கான மருத்துவ பரிசோதனை செய்யப்படுவார்கள் என்றும், அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மேலும் பயணத்தின் போது, சுகாதார அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வழங்கிய நெறிமுறைகளைப் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் கடந்த வாரம் வெளியிட்ட செய்தி குறிப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.