UAE : ஜூலை 5 முதல் அனைத்து அரசு ஊழியர்களும் அலுவலகங்களில் இருந்து பணிபுரியலாம்..!! அமீரக அரசு அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை ஊழியர்களும் வரும் ஜூலை மாதம் 5 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் 100 சதவீத எண்ணிக்கையின் அடிப்படையில் தங்கள் அலுவலகங்களில் இருந்து பணிபுரியலாம் என்று அமீரக அரசின் மனித வள கூட்டாட்சி ஆணையம் (FAHR) அறிவித்துள்ளது. அமீரகத்தில் விதிக்கப்பட்டிருந்த கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது அமீரகம் முழுவதும் உள்ள அரசுத்துறை ஊழியர்கள் அனைவரும் அலுவலகங்களுக்கு வந்து பணிபுரியலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு இந்த விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் இவர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே வேலையை தொடரலாம் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. விலக்கு அளிக்கப்படும் ஊழியர்கள் வீட்டிலிருந்த படியே தொடர்ந்து பணியாற்ற மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் முக கவசம் அணிதல், கையுறைகள் அணிதல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் போன்ற கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஒருவருக்கொருவர் கைகுலுக்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் ஊழியர்கள் தங்களுக்கிடையே சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்பொழுது, அமீரகத்தில் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் (துபாயை தவிர்த்து) குறிப்பிட்ட சதவீத எண்ணிக்கையின் அடிப்படையிலேயே ஊழியர்கள் அலுவலகங்களில் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், துபாய் அரசு அலுவலகங்கள் மட்டும் ஜூன் மாதம் 15 ம் தேதியிலிருந்து 100 சதவீத ஊழியர்கள் எண்ணிக்கையில் இயங்கி வந்து கொண்டிருக்கின்றது. இதற்கிடையில், அஜ்மன் அரசானது நாளை (ஜூலை 1) முதல் அலுவலகங்களில் 75 சதவீத எண்ணிக்கையிலான ஊழியர்களின் அடிப்படையில் பணிபுரியலாம் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.