துபாயில் நேற்று உயிரிழந்த நிதினிற்கு குழந்தை பிறந்தது..!! உடலை இந்தியா அனுப்பும் பணி தீவிரம்..!!
கர்ப்பிணியான தன் மனைவியை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க உச்ச நீதிமன்றத்தை நாடிய துபாயில் பணிபுரிந்த 29 வயதான நிதின் சந்திரன் திங்கள்கிழமை துபாயில் தூக்கத்திலேயே உயிரிழந்ததையடுத்து, பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மனைவி இன்று கேரளாவில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் மெக்கானிக்கல் இன்ஜினியராக இருந்த நிதின் சந்திரன் ஜூன் 8 திங்கள்கிழமை அதிகாலை தூக்கத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி ஆதிரா கீதா ஸ்ரீதரன் (வயது 27), இன்று பெண் குழந்தையை பெற்றெடுத்தார் என்று நிதின் உறுப்பினராக இருந்த INCAS யூத் விங்கின் தலைவர் ஹைதர் கோடனாத் தட்டாதசாத் தெரிவித்துள்ளார்.
நிதினின் உடலை பரிசோதனை செய்ததில் அவர் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என சோதனை முடிவு வந்துள்ளதால் அவரது உடல் புதன்கிழமை (நாளை) இந்தியாவின் கோழிக்கோட்டில் உள்ள தனது சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்படும் என்று தட்டாத்தாசாத் கூறியுள்ளார். “நாளை (புதன்கிழமை) கொச்சிக்கு ஒரு விமானம் உள்ளது. அவரது உடல் இந்த விமானத்தின் மூலம் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்படும். அமீரகத்தில் செய்ய வேண்டிய ஆவணப்படுத்தல் முறைகள் அனைத்தும் விரைவில் முடிவடையும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து, தாய் மற்றும் குழந்தை இருவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் தட்டாதசாத் தெரிவித்துள்ளார்.
நிதினின் மனைவி கேரளாவுக்குப் புறப்படுவதற்கு முன்னதாக நிதின் தங்கள் குழந்தையை இந்தியாவில் பிரசவிக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். மேலும், நிதினுக்கு தனது மனைவியுடன் கேரளாவிற்கு செல்ல நினைத்திருந்த போதிலும், அவசரகால திருப்பி அனுப்பும் விமானங்களில் ஒரு பயணியின் இடத்தை வீணாக்க விரும்பாததால் கேரளா செல்லவில்லை என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.