அமீரக செய்திகள்

உச்ச நீதி மன்றத்தை நாடி மனைவியை பிரசவத்திற்கு இந்தியா அனுப்பிய கணவர் துபாயில் மரணம்..!! சோகத்தில் உறவினர்கள்..!!

கொரோனாவின் பாதிப்பால் ஏற்பட்ட விமான போக்குவரத்து தடையினால், வெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்ட போது, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்த கர்ப்பிணியான தன் மனைவியை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த, இந்தியாவை சேர்ந்த 29 வயதான நிதின் சந்திரன் என்பவர் இன்று காலை அமீரகத்தில் உயிரிழந்துள்ளார்.

துபாயில் பணிபுரிந்து வந்த இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த நிதின் கடந்த சில மாதங்களாக அமீரகத்தில் தன் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். அவரின் மனைவி ஆதிரா கீதா ஸ்ரீதரன் (வயது 27) கர்ப்பமுற்று இருந்த நிலையில், பிரசவத்திற்காக கேரளாவிற்கு அனுப்பி வைக்க நிதின் முடிவு செய்த நிலையில், கொரோனாவின் பாதிப்புகளினால் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து தடையின் காரணமாக இந்தியாவிற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கர்ப்பமுற்று இருந்த தன் மனைவியை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க நிதின் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளும் பயனளிக்காத நிலையில், இறுதியாக இருவரும் இந்தியாவின் உச்ச நீதி மன்றத்தில் இந்தியாவிற்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டி மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதி மன்றமும் அவரை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதன் பிறகு, இந்திய அரசால் தொடங்கப்பட்ட வந்தே பாரத் திட்டத்தின் மூலம் அமீரகத்திலிருந்து மே 7 ம் தேதி இயக்கப்பட்ட முதல் விமானத்தில் நிதினின் மனைவிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு கேரளாவில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்திற்கு இந்திய தூதரகத்தின் சார்பாக அனுப்பி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவி இந்தியா சென்று ஒரு மாதம் முடிவடைந்திருந்த நிலையில் துபாயில் உள்ள இன்டர்நேஷனல் சிட்டியில் நண்பர்களுடன் வசித்து வந்த நிதின் இன்று காலை உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று காலை, அவரது நண்பர்கள் அவரை வேலைக்குச் செல்ல எழுப்ப முயன்றபோது அவர் உடல் அசைவின்றி இருப்பதை கண்ட அவரின் நண்பர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாடியதாகவும் இருப்பினும் அவர் உறக்கத்தின் போதே இறந்துவிட்டதாகவும் நிதின் உடன் தங்கியிருந்த நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இது அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இறப்பு குறித்த விபரங்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், நிதின் மாரடைப்பின் காரணாமாக இறந்திருக்கலாம் என்று அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே அவருக்கு இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருந்து வந்ததாகவும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். இதய கோளாறுகள் காரணமாக கடந்த ஆண்டு நவம்பரில் ரஷீத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆறு நாட்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது நிதின் உயிரிழந்ததை தொடர்ந்து இறுதி சடங்குகளுக்காக அவரது உடலை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க அவரின் நண்பர்கள் மற்றும் அவர் உறுப்பினராக இருந்து வந்த INCAS யூத் விங் எனும் குழுவினரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், INCAS யூத் விங்கின் தலைவர் ஹைதர் கோடனாத் தட்டாதசாத் “கொரோனா பரிசோதனைக்காக அவரது மாதிரிகளை நாங்கள் வழங்கியுள்ளோம். பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்தால், அவரது உடலை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று கூறியுள்ளார்.

பிரசவத்திற்கு சில வாரங்களே இருக்கக்கூடிய நிலையில், நிதினின் மனைவி ஆதிராவிற்கு, அவர் கணவரின் இறப்பு செய்தி பற்றி குடும்பத்தினர்கள் தெரிவிக்கவில்லை எனவும், கணவரின் இறப்பு செய்தியால் அவரின் வயிற்றில் இருக்கக்கூடிய குழந்தைக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்க, அவர் தற்போது வீட்டின் அருகாமையில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹைதர் கோடனாத் தட்டாதசாத் தெரிவித்துள்ளார்.

 

Source : Khaleej Times

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!