அமீரக செய்திகள்

அபுதாபி : வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பவர்களுக்கு இலவச உணவு, சலவை, மருத்துவ ஆலோசனை சேவைகள்..!!

அபுதாபி சுகாதாரத் துறை (DoH) மற்றும் அபுதாபி பொது சுகாதார மையம் ஆகியவை ஒருங்கிணைந்து கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு வீட்டு தனிமைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. சமீபத்தில், சுகாதாரத் துரையின் சார்பாக ஒரு ஸ்மார்ட் வாட்ஸ்அப் சேவையை அறிமுகப்படுத்தியது, தற்பொழுது இந்த சேவையானது கொரோனா மற்றும் வீட்டு தனிமைப்படுத்தல் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கான மையமாக செயல்பட்டு வருகின்றது. மேலும், பதிவுசெய்யப்பட்ட நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தல் சேவைகளை அணுகவும் இது உதவுகிறது.

இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு கூறப்படும் வீட்டு தனிமைப்படுத்தல் முறையானது நோயாளிகளுக்கு வசதியாக உள்ளதா என்பதை அபுதாபியில் உள்ள சுகாதார அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர். இதனையொட்டி, கொரோனாவால் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு இலவச உணவு, தொலைபேசி ஆலோசனைகள், சலவை மற்றும் குப்பைகளை அகற்றுதல் ஆகிய சில அடிப்படை சேவைகள் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்துடன் வரும் அடிப்படை தேவைகளில், வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் மருத்துவர்களின் தொலைபேசி ஆலோசனை சேவைகளை அணுக முடியும் என்றும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பவர்களுக்கு, ஒரு கேட்டரிங் நிறுவனம் மூலமாக ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படும் மற்றும் தனி நபர் இரண்டு வார காலப்பகுதியில் நான்கு முறை சலவை சேவைகளைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் இரண்டு முறை அவர்களின் வீடுகளிலிருந்து குப்பைகள் அகற்றப்படுகின்றன என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு கொரோனா பரிசோதனையில் எதிர்மறை முடிவு வரும் வரை மேற்கொள்ளப்படும் அடுத்தடுத்த கொரோனா பரிசோதனையை ஒரு மருத்துவ குழு நோயாளியின் வீடுகளுக்கே சென்று மேற்கொள்ளும் என்றும் இதனால் நோயாளிகள் ஒவ்வொரு பரிசோதனையின் போதும் பரிசோதனை மையத்தை சென்று அணுக தேவையில்லை என்றும் அபுதாபி சுகாதாரத் துறை (DoH) தெரிவித்துள்ளது.

வீட்டு தனிமைப்படுத்தலுக்கான தகுதிகள்
  • கொரோனாவிற்காக மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்ட 18 முதல் 59 வயதிற்குட்பட்ட பெரியவர்களுக்கு, அவர்கள் அறிகுறியற்றவர்களாகவோ அல்லது லேசான அறிகுறிகளைக் கொண்டோ இருந்தால் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை விளக்கியுள்ளது.
  • அவர்களிடம் ஸ்மார்ட் போன் மற்றும் அவர்களுக்கென நல்ல காற்றோட்டம் கொண்ட குளியலறை வசதியுடன் கூடிய அறை வீட்டில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட நோயாளிகள் ஒரு கண்காணிப்பு சாதனம் (ஒரு ஸ்மார்ட் வாட்ச்) அணியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், இது அதிகாரிகள் அவர்களை கண்காணிக்கவும், அவர்கள் தங்கள் வீட்டில் மட்டுமே தங்குவதை உறுதி செய்யவும் இது உதவுகிறது. மேலும், இதற்கு கட்டணம் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • நோயாளி ஒரு பொறுப்புள்ள படித்த நபராக இருக்க வேண்டும், அவர் தேவைப்படும் போதெல்லாம் வீட்டில் தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை குறித்த வழிமுறைகளைப் பின்பற்ற உறுதி கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை கூறியுள்ளது.
  • அதிக ஆபத்துள்ள நோயாளிகள் – 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாள்பட்ட இருதய அல்லது சுவாச நோய்கள் உள்ளவர்கள் மற்றும் அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் வேறு ஏதேனும் கடுமையான நோய்கள் போன்றவர்கள் மற்றும் நேரடி சுகாதார உதவி தேவைப்படும் மற்றவர்கள் வீட்டில் சுய தனிமைப்படுத்த தகுதியற்றவர்கள் என்றும் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்
  • அட்டர்னி ஜெனரல் வழங்கிய அபராதம் மற்றும் மீறல்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலின் படி, வீட்டு தனிமைப்படுத்தலுக்கான சுகாதாரத் துறை அறிவித்த விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விதிமீறலில் ஈடுபடுவோரின் புகைப்படங்களை செய்தித்தாள்களில் வெளியிடுவதோடு கூடுதலாக, ஆறு மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை மற்றும் / அல்லது 100,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!