இந்தியா: பிற நாடுகள் வெளிநாட்டவர்களை அனுமதித்தால் சர்வதேச விமான சேவை தொடங்குவது குறித்து அரசு முடிவு செய்யும்..!! அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல்..!!

இந்தியாவில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கின் காரணமாக தடை செய்யப்பட்டிருக்கும் சர்வதேச விமான போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்குவது குறித்து, இந்தியாவின் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7, 2020) தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக உலகிலுள்ள பல்வேறு நாடுகள், வெளிநாட்டவர்கள் தங்கள் நாடுகளில் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை தளர்த்தி, தங்கள் நாடுகளுக்குள் பிற நாட்டுக்கு சொந்தமான விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்கும் பட்சத்தில் மட்டுமே இந்தியாவில் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்து அரசாங்கம் முடிவெடுக்கும் என்று அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள தொடர்ச்சியான ட்வீட்களில், “கட்டாய காரணங்களின் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் மக்களால், இந்தியாவில் திட்டமிடப்பட்ட சர்வதேச விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான தேவை அதிகரித்து வருவதை தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள சர்வதேச விமான நடவடிக்கைகளின் தற்போதய நிலையை நான் மதிப்பாய்வு செய்தேன். ஆனால் உலகளவில், தற்போதைய நிலைமை சாதாரண சூழ்நிலையிலிருந்தும் வெகு தொலைவில் உள்ளது”.
A decision to resume regular international operations will be taken as soon as countries ease restrictions on entry of foreign nationals. Destination countries have to be ready to allow incoming flights.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) June 7, 2020
“பெரும்பாலான நாடுகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான சர்வதேச விமான போக்குவரத்து நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் தங்கள் நாட்டின் சொந்த குடிமக்களுக்கு மட்டுமே நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி அளிக்கின்றனர். வெளிநாட்டவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட நாடுகள், சில நாடுகளிலிருந்து வரும் விமானங்களை தரையிறங்க அனுமதிக்கின்றனர். இருப்பினும், தனிமைப்படுத்தல் அல்லது தனிமைப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்” எனவும் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
Due to increasing demand for resumption of scheduled international flights by people who want to travel abroad due to compelling reasons, I reviewed the state of international flight operations around the world.
Globally the situation is far from normal.@MoCA_GoI @PIB_India
— Hardeep Singh Puri (@HardeepSPuri) June 7, 2020
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் வந்தே பாரத் திட்டத்தில் இயக்கப்படும் விமானம் மூலம், தங்கள் நாட்டிற்குள் பிற நாட்டவர்கள் நுழைய அனுமதிக்கும் நாடுகளுக்கு வெளிநாடு வாழ் இந்திய பயணிகளை பயணம் மேற்கொள்ள அனுமதிக்கிறோம். இது வரையிலும் 13,500 க்கும் மேற்பட்டோர் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் மூலம் 22000 விமான டிக்கெட்டுகள் தற்போது (ஜூன் 5 – ஜூன் 6) விற்கப்பட்டுள்ளதாகவும், ஐரோப்பா மற்றும் பிற நாடுகளுக்கு செல்ல கூடிய விமானங்களில் விரைவில் முன்பதிவு தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர விமான போக்குவரத்து தடை அமலில் இருக்கும் இந்த கால கட்டத்தில், இது வரையிலும் சுமார் 100,000 பயணிகள் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு பயணித்துள்ளனர் எனவும், சுமார் 38,000 இந்திய குடிமக்கள் வெளிநாடுகளிலிருந்து 640 சிறப்பு விமானங்கள் மூலம் நாடு திரும்பியுள்ளனர் என்றும் கூறிய அவர், இதுபோன்ற மேலும் பல சிறப்பு விமானங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா வெளியிட்டிருந்த ஒரு ட்வீட்டில், அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து புறப்படும் சிறப்பு விமானங்களில் பயணிக்க விரும்பும் இந்திய குடிமக்கள் மற்றும் OCI அட்டை வைத்திருப்பவர்கள், ஜூன் 11 அல்லது அதற்குப் பிறகு இந்த இரு நாடுகளிலிருந்து புறப்படும் விமானங்களில் பயணிக்க, ஏர் இந்தியா வலைத்தளத்தின் மூலம் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்திருந்தது. மேலும் பயணம் செய்ய விண்ணப்பிப்பவர்கள் உள்ளூர் தூதரகம் அல்லது உயரதிக அலுவலகங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.