குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் மக்கள்தொகையினை 70 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறைக்க குவைத் அரசாங்கம் முடிவு..!!
இந்தியர்கள் அதிகம் வசிக்கும் வளைகுடா நாடுகளில் ஒன்று குவைத் நாடாகும். தமிழர்கள் பலரும் அந்நாட்டில் பணிபுரிந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து குவைத் நாட்டிற்கு வந்து வசிக்கும் புலம்பெயர்ந்த வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை விகிதத்தை 70 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்க குவைத் அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டின் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எண்ணெய் வளம் கொண்ட குவைத் நாடானது வளைகுடா நாடுகளில் அதிகளவிலான வெளிநாட்டு மக்களைக் கொண்டுள்ள நாடாகும். குவைத்தில் பெரும்பாலும் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய தொழிலாளர்களே அதிகம் வசித்து வருகின்றனர்.
குவைத் நாட்டிலுள்ள மொத்த மக்கள்தொகையான 4.8 மில்லியன் மக்களில், 3.3 மில்லியன் பேர் வெளிநாட்டினர் என்று அந்நாட்டின் பிரதமர் சபா அல் கலீத் அல் ஹமத் அல் சபா கூறியுள்ளார். குவைத் நாட்டில் 7,50,000 பேர் வீடுகளில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களாக இருக்கின்றனர். இந்த எண்ணிக்கையானது குவைத் நாட்டிலுள்ள குவைத் குடிமக்களின் மொத்த எண்ணிக்கையில் பாதியளவு (50%) எண்ணிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குவைத் நாட்டில் இருக்கும் இந்த மக்கள்தொகையின் முரண்பாடுகளை சரிசெய்யும் விதமாக வெளிநாட்டவர்கள் மக்கள் தொகையின் எண்ணிக்கை விகிதத்தை குறைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள முடிவின் மூலம் குவைத் நாட்டில், குவைத் நாட்டு குடிமக்கள் தொகையில் 70 சதவீதமும், வெளிநாட்டவர்கள் மக்கள் தொகையில் 30 சதவீதமும் இருக்குமாறு வழிவகை செய்யப்படும் என்று அந்நாட்டின் செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் சபா அல் கலீத் அல் ஹமத் அல் சபா தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், இந்த மக்கள்தொகை முரண்பாட்டினை சரிசெய்ய எதிர்காலத்தில் நாங்கள் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டி வரும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
மற்ற வளைகுடா நாடுகளைப் போலவே, குவைத் நாட்டிலும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்ட எண்ணெய் விலைகளின் வீழ்ச்சியானது, அந்நாட்டின் சொந்த குடிமக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான வழிகளைத் தேர்ந்தெடுக்க காரணமாக அமைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாக 1,500 வெளிநாட்டு ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக குவைத் அரசுக்கு சொந்தமான குவைத் ஏர்வேஸ் கடந்த வாரம் கூறியது குறிப்பிடத்தக்கது.
Kuwait faces “big challenge” to address population discrepancy – PM https://t.co/91pm0VRywf#KUNA #KUWAIT
— Kuwait News Agency – English Feed (@kuna_en) June 3, 2020