ஓமான் : கொரோனாவால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்வு..!! ஷாப்பிங் மால்கள், வணிக நடவடிக்கைகள் மீண்டும் இயங்க அனுமதி..!! ROP யின் அனைத்து சேவைகளும் மீண்டும் தொடங்கும் எனவும் அறிவிப்பு..!!
ஓமான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு புதன்கிழமை முதல் ஷாப்பிங் மால்கள், சில வணிகங்கள் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஓமான் நாட்டிலிருக்கும் கொரோனாவிற்கான உச்சக்குழு செவ்வாய்க்கிழமை எடுத்த முடிவைத் தொடர்ந்து 50 க்கும் மேற்பட்ட வணிக மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் மீண்டும் திறப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதித்துள்ளது.
இந்த முடிவின் கீழ் வரும் வணிகங்களில் ரியல் எஸ்டேட் அலுவலகங்கள், டிராவல் ஏஜென்சி, பராமரிப்பு வணிகங்கள் போன்றவை அடங்கும். மேலும், வணிக மற்றும் தொழில்துறை நிறுவனங்களில் குறைந்தது இரண்டு மீட்டருக்கு சமூக இடைவெளியை வாடிக்கையாளர்கள் பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனாவின் தாக்கத்தினால் நிறுத்தப்பட்டிருந்த ராயல் ஓமான் காவல்துறையின் (ROP) அனைத்து சேவைகளும் வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவில் நிலை, விசா வழங்கல், விசா ஸ்டாம்பிங் மற்றும் குடியுரிமை அட்டை சேவைகள் உள்ளிட்ட பாஸ்போர்ட் மற்றும் ரெசிடென்ஸ் பொது இயக்குநரகத்தில் உள்ள அனைத்து சேவைகளும் கடந்த மார்ச் 19 ம் தேதி நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த சேவைகள் அனைத்தும் வரும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில், கொரோனாவிற்கு எதிராக போராடுவதற்கு ஓமானில் வேலை செய்து தற்பொழுது இந்தியாவில் விடுப்பில் இருக்கும் 73 இந்திய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை மீண்டும் நாட்டிற்கு திங்கள்கிழமை அன்று அந்நாட்டின் அரசாங்கம் வரவழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.