சவூதி அரேபியா : மக்காவில் மூடப்பட்டிருந்த அனைத்து மசூதிகளும் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிப்பு..!!
சவூதி அரேபியாவில் உள்ள புனித நகரமான மக்காவில் கொரோனாவிற்கெதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அங்குள்ள மசூதிகளை வரும் ஜூன் மாதம் 21 ம் தேதி (ஞாயிறு) முதல் மீண்டும் திறக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த காலத்தில் அந்நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் ஊரடங்கு அறிவித்து அனைத்து மசூதிகளும் மூடப்பட்டது.
பின்னர், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அந்நாட்டில் உள்ள மசூதிகள் மீண்டும் திறக்கப்பட்ட போதிலும், மக்கா நகரின் லாக்டவுன் நீக்கப்படாமல் அங்குள்ள மசூதிகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு மக்காவில் உள்ள மசூதிகள் தற்பொழுது திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்காவில் உள்ள இஸ்லாமிய விவகார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் மக்காவில் உள்ள அனைத்து மசூதிகளும் மீண்டும் திறப்பதற்கு தயாராகி வருவதாகவும், கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், தன்னார்வலர்கள் மசூதிகளில் சமூக இடைவெளியுடன் தொழுவதற்கு ஏதுவாக இடைவெளியை அறிவுறுத்தும் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளதாகவும், மேலும் மசூதிகளுக்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்துவதை தன்னார்வலர்கள் உறுதி செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
மக்கா நகரில் இருக்கும் 1,500 க்கும் மேற்பட்ட மசூதிகளில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்ட பின்னர் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர்கள் தங்கள் வீட்டிலிருந்தே சொந்தமாக தொழுகை விரிப்புகளை (முஸல்லா) மசூதிகளுக்கு தொழ வரும் போது கொண்டு வர வேண்டும் என்றும் தொழுகையின் போது சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.