அமீரக செய்திகள்

“என் அன்பான பிரித்விக்”… மருத்துவமனையில் போராடிய இந்திய சிறுவனுக்கு ‘துபாய் மன்னர்’ அனுப்பிய கடிதம்..!! பெற்றோர் நெகிழ்ச்சி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்த 15 வயதான பிரித்விக் சின்ஹா என்ற சிறுவனுக்கு அவசரமாக டையலிஸிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக பிரித்விக்கின் பெற்றோர் பிறரின் உதவியை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அந்த சிறுவனுக்கு தேவையான அனைத்து உதவியையும் தான் செய்வதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு சேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் அந்த சிறுவனுக்கு அனுப்பிய கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார். பிரித்விக் துபாயில் இருக்கக்கூடிய துபாய் கல்லூரியில் படித்து வரும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்விக் வாழ்நாள் முழுவதுமான சிறுநீரக செயலிழப்பின் இறுதி கட்டத்தை அடைந்ததையொட்டி, அவர் கடந்த மே மாதம் 31 ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் உடலிலுள்ள அதே இரத்த மாதிரியைக் கொண்டிருக்கும் அவரது தந்தையான பாஸ்கர் சின்ஹா தனது சிறுநீரகத்தை மகன் பிரித்விக்கு நன்கொடை அளிக்க ஏற்கெனவே முடிவு செய்திருந்த நிலையில், கொரோனாவினால் ஏற்பட்ட விமானப் போக்குவரத்துத் தடையின் காரணமாக ப்ரித்விக்கின் தந்தை அமீரகம் வர முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், அவசர சூழ்நிலை காரணமாக அவரது தந்தை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பி வர அனுமதி அளிக்கப்பட்டது மட்டுமல்லாமல், அந்த சிறுவனின் பெற்றோரின் நண்பர்கள் லில்லி மற்றும் சாம் பர்னெட், இசபெல் பிண்டாடோ மற்றும் மைக்கேல் லம்பேர்ட் ஆகியோர் மருத்துவ உதவி தொடர்பாக அல் ஜலீலா ஃபவுண்டேஷனை தொடர்பு கொண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை மாணவன் ப்ரித்விக்கிற்கு மாண்புமிகு ஷேக் முகமது அவர்களிடம் இருந்து பூக்கள் மற்றும் ஒரு ஐபாட் உடன் கடிதம் ஒன்று பெறப்பட்டதாக ப்ரித்விக்கின் தாய் கூறியுள்ளார்.

அந்த கடிதத்தில் “என் அன்பான ப்ரித்விக், நீங்கள் இங்கே (அமீரகத்தில்) வீட்டில் இருக்கிறீர்கள். நீங்கள் பாதுகாப்பான கைகளில் இருக்கிறீர்கள் என்பதையும், உங்களை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்வேன் என்பதையும் நினைவூட்டுவதற்கான ஒரு சிறிய செயல் இது…. சிரித்துக் கொண்டே இருங்கள். இப்படிக்கு முகமது பின் ரஷீத் அல் மக்தூம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ப்ரித்விக்கின் தாயார் கூறுகையில், “நாங்கள் ப்ரித்விக்கை இழந்து கொண்டிருந்தோம். உதவிக்காக பல்வேறு முயற்சிகள் செய்தும் எங்கும் உதவி கிடைக்கவில்லை. கொரோனா வைரஸ் நிலைமை மேலும் இந்த விஷயங்களை மோசமாக்கியது. இது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், மாண்புமிகு ஷேக் முகமது அவர்கள் ஒரு தேவதையாக வந்து ப்ரித்விக்கை கவனித்துக்கொள்வதை உறுதி செய்தார். இதற்கு பெரிதும் துணை புரிந்த அல் ஜலீலா அறக்கட்டளையுடன் சேர்ந்து எல்லாவற்றையும் ஒருங்கிணைத்த அனைவருக்கும் எனது நன்றிகள். அவர்களின் உதவியில்லாமல் பிருத்விக் உயிர்பிழைப்பதற்கு வாய்ப்பில்லை” என்று கூறியுள்ளார்.

உலக அறிவியல் அறிஞராக விளங்கும் ப்ரித்விக், உலகில் 18 வயதிற்குட்பட்ட 75 விதிவிலக்கான கணிதவியலாளர்களில் ஒருவராகவும், பிராந்தியத்திலேயே இவர் ஒருவர்தான் இப்பிரிவில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து பிரித்விக் கூறும் போது, எனது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்ததும் எதிர்காலத்தில் ஐக்கிய அரபு அமீரக நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்பேன் என்றும் குறிப்பாக அறிவியல், கணித மற்றும் தொழில்நுட்ப்ப துறைகளில் என்னால் இயன்ற அளவில் அத்துறைகளின் வளர்ச்சியில் பங்களிப்பேன் என்றும் கூறியுள்ளார். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் விண்வெளித் திட்டத்தில் பங்களிப்பதும் எனது கனவு என்றும் கூறியுள்ளார்.

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!