வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்கள் ஜூலை மாத இறுதிக்குள் தாயகம் அழைத்து வரப்படுவர்..!! அமைச்சர் தகவல்..!!

இலங்கை உட்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து, சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் சுமார் ஐம்பதாயிரம் இலங்கை குடிமக்களை திருப்பி அனுப்பும் திட்டத்தை அரசாங்கமும் சுகாதார நிபுணர்களும் ஒன்றிணைந்து மேற்கொண்டுவருவதாகவும், இன்னும் சில மாதங்களில் அனைத்து குடிமக்களும் திரும்ப அழைத்து வரப்படுவர் எனவும் ஜனாதிபதி அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “நேற்று மாலத்தீவில் இருந்து இலங்கை குடிமக்களை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்து. இன்று நேபாளத்திலிருந்து ஒரு விமானம் வர திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் 17 ம் தேதி, துபாயில் இருந்து ஒரு விமானம் வர திட்டமிடப்பட்டுள்ளது. திரும்ப அழைத்து வரப்படும் பயணிகளில் பெரும்பான்மையானவர்கள் கர்ப்பிணிப் பெண்கள்” என்றும் கூறியுள்ளார்.

விமான பயணத்திற்கு அனுமதிக்கப்படும் அனைத்து பயணிகளும் தங்கள் விமானம் புறப்படும் நேரத்திற்கு 48 மணி நேரம் முன்பே கொரோனாவிற்கான PCR சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், இலங்கை வந்தடைந்ததும், அவர்கள் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள மருத்துவ அதிகாரிகளால் மற்றொரு PCR சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் விளக்கியுள்ளார்.

மேலும் “சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தைத் திறப்பதை நாங்கள் தாமதப்படுத்த முடியாது. ஏனெனில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சார்ந்திருக்கக்கூடிய துறைகளான ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாத் துறை மீண்டும் தங்களின் செயல்பாடுகளைத் தொடங்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளுக்கு கூட கடுமையான சுகாதார வழிகாட்டுதல்கள் பராமரிக்கப்படும். சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்கு இணையாக வெளிநாடுகளில் தவிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்பும் பணியையும் நாங்கள் தொடர்வோம்” என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதே போன்று இலங்கையர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை குறித்து சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்னா ரனதுங்க, சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு முன்னர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை (BIA) மீண்டும் திறக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை திரும்புவதற்கு எதிர்பாத்து காத்திருக்கும் அனைத்து குடிமக்களும், சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையம் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பே அழைத்து வரப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். எனினும் நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருக்கக்கூடிய காலி இடங்களை பொறுத்தே இது முடிவு செய்யப்படும் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.