UAE : அடுத்த கட்டமாக தமிழகத்திற்கு இரு விமானங்கள்..!! சென்னை, மதுரை செல்லும் என அறிவிப்பு..!!
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் அடுத்த கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 25 விமானங்கள் இந்தியாவிற்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 25 விமானங்களில் 10 விமானங்கள் கேரளாவிலுள்ள நான்கு விமான நிலையங்களுக்கும் மீதமுள்ள விமானங்கள் மகாராஷ்டிரா, புது தில்லி, ஸ்ரீநகர், சண்டிகர், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், லக்னோ, பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கும் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 25 விமானங்களில் இரண்டு விமானங்கள் மட்டுமே தமிழகத்திற்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு விமானங்களில் ஒன்று சென்னைக்கும் மற்றொன்று மதுரைக்கும் செல்லும் என கூறப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்த விமானங்களின் பட்டியல் அடிப்படையில், வரும் ஜூன் மாதம் 9 ம் தேதி அபுதாபியில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கும், ஜூன் மாதம் 15 ம் தேதி துபாயில் இருந்து மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கும் விமானங்கள் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதரகங்கள் அறிவித்துள்ள முன்னுரிமைகளின் அடிப்படையிலேயே விமானங்களில் பயணம் செய்வதற்கு நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகம் முதற்கொண்டு அனைத்து வளைகுடா நாடுகளில் இருக்கும் தமிழர்களுக்கும் அந்தந்த நாடுகளில் இருந்து அதிக விமானங்கள் தமிழகத்திற்கு அறிவிக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.