அமீரகத்திலிருந்து தமிழகத்திற்கு செல்லவிருக்கும் தனி விமானம்..!! விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!
இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதால் வெளிநாடுகளிலிருந்து இந்தியா செல்ல விருப்பம் தெரிவித்து தூதரகத்தில் விண்ணப்பித்தவர்களை வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இந்திய அரசு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை பல கட்டங்களாக மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் பல விமானங்கள் ஒதுக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் நாடு திரும்பியுள்ளனர். அமீரகத்திலிருந்து 250 க்கும் மேற்பட்ட விமானங்கள் இந்தியாவிற்கு அறிவித்திருந்த போதிலும் தமிழகத்திற்கு இதுவரையிலும் 13 விமானங்கள் மட்டுமே வந்தே பாரத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், கடந்த மூன்றாம் கட்டத்தில் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் தனியார் நிறுவன விமானங்களுக்கும், தனியார் அமைப்பினர் மூலமாக சார்ட்டர் விமானங்கள் இயக்குவதற்கும் இந்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் அமீரகத்திலிருந்து இந்தியாவின் பிற பகுதிகளுக்கு தனி விமானங்களை இயக்கி வருகின்றனர். இதில் கேரளாவிற்கு மட்டுமே சுமார் 50 க்கும் அதிகமான சார்ட்டர் விமானங்கள் அம்மாநில தனியார் அமைப்புகளின் மூலமாக இயக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்திற்கு தனி விமானங்களை இயக்குவதற்கு தேவையான முயற்சிகளை முன்னெடுத்து செல்ல யாரும் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில், விமான பற்றாக்குறையின் காரணமாக அமீரகத்திலிருந்து தமிழகத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வந்த கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், மருத்துவ தேவை உடையவர்கள், குடும்பத்தில் ஏற்பட்ட மரணம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவை உடையவர்களை, அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் வசிக்கும் மகாதேவன் அவர்கள் தன்னார்வலராக தனி விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கும் முயற்சியை மேற்கொண்டு நண்பர்களின் உதவியுடன் இரு விமானங்கள் மூலம் 350 க்கும் மேற்பட்ட தமிழர்களை மதுரைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இது குறித்து மகாதேவன் அவர்கள் கலீஜ் தமிழிடம் கூறியதாவது, “தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலின் காரணமாக அமீரகத்திலிருந்து தமிழகத்திற்கு செல்ல முடியாமல் பலரும் தவித்து வந்ததை கண்டு நானும் மனம் வருந்தினேன். இது போன்ற சூழ்நிலையில் இங்குள்ள தமிழ் மக்களுக்கு உதவும் பொருட்டு என்னால் இயன்ற முயற்சிகளை நண்பர்களுடன் சேர்ந்து செய்து வருகிறேன். அத்தியாவசிய தேவையின் காரணமாக தமிழ்நாடு செல்ல வேண்டி எங்களிடம் தொடர்பு கொண்டவர்களை வந்தே பாரத்தின் சிறப்பு விமானங்கள் மூலமாகவும் அனுப்பி வைத்துள்ளோம்” என்றும் கூறினார்.
மேலும் கூறுகையில், “தமிழகத்திற்கு செல்ல அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டதை தொடர்ந்து இந்திய அரசு மற்றும் தூதரகத்தின் ஒப்புதலுடன் தனி விமானம் ஏற்பாடு செய்து 350 க்கும் மேற்பட்ட தமிழ் மக்களை மதுரைக்கு அனுப்பி வைத்துள்ளோம். தற்போது வரும் ஜூலை மாத தொடக்கத்தில் திருச்சிக்கு மேலும் சில தனி விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளோம். விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்துகொள்ள இணையதளம் ஒன்றும் தொடங்கப்பட்டு அதில் பயணிகளின் விபரங்களை சேகரித்து வருகிறோம்” என்றும் கூறினார்.
திருச்சிக்கு செல்லக்கூடிய தனி விமான பயணத்திற்கான கட்டணத்தில் டிக்கெட், கொரோனா சோதனை (துபாய்), இரண்டு கொரோனா சோதனை (திருச்சி), 7 நாட்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தல், ஸ்னாக்ஸ், டீ உட்பட மூன்று வேளை உணவு, மருத்துவ மையத்திற்கு செல்ல வாகன வசதி உள்ளிட்ட அனைத்தும் அடங்கும் என்றும் ஏற்பாட்டாளர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி விமானம் மூலம் திருச்சிக்கு செல்ல விருப்பமுள்ளவர்கள் happyjourney.ae எனும் இந்த லிங்கில் சென்று கேட்கப்படும் தகவல்களை வழங்குவதன் மூலம் பயணம் மேற்கொள்வதற்கான அனுமதியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மகாதேவன் அவர்கள், கொரோனாவால் வேலையிழந்து உணவின்றி தவித்த பல தமிழர்களுக்கும் நேரடியாக சென்று உணவு, சமைப்பதற்கான மளிகை பொருட்கள் போன்ற பல உதவிகளையும் செய்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஷார்ஜாவில் உணவின்றி தவித்த 200 நபர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களையும் நண்பர்களின் உதவியுடன் வழங்கியுள்ளார். மேலும் சத்வா, அஜ்மான் போன்ற பகுதிகளில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை நல் உள்ளம் கொண்ட பிறரின் ஆதரவுடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். இது குறித்து அவர் கூறும்போது, இங்குள்ள தமிழர்கள் யாரும் உணவு உண்ணாமல் உறங்கக்கூடாது என்பதே எனது விருப்பம். யாரேனும் உணவின்றி தவித்தால் அவர்களுக்கு தேவையான உதவியை செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினார்.
கடந்த வாரம் கலீஜ் தமிழின் வாசகர் ஒருவர் தனது தந்தை இறந்துவிட்டதாகவும், உடனடியாக தமிழகம் செல்ல உதவி செய்யுமாறும் எங்களிடம் தெரிவித்ததையடுத்து, அவரின் விபரங்கள் மகாதேவன் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவரின் முயற்சியினால் ஜூன் 22 ஆம் தேதி ராஸ் அல் கைமா விமான நிலையத்திலிருந்து மதுரைக்கு சென்ற தனி விமானம் மூலம் தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தனி விமான பயணத்திற்கு மற்றும் உணவிற்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்..
ஒருங்கிணைப்பாளர்: ஸ்டாலின்
தொலைபேசி எண்: 0559674720
அமீரகத்தில் வேலையிழந்து உணவின்றி தவித்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மகாதேவன் மற்றும் அவரது நண்பர்கள்.. pic.twitter.com/f7ttdr1zZS
— Khaleej Tamil (@khaleej_tamil) June 28, 2020