அபுதாபி: உணவகங்கள், கஃபேக்கள் 80 சதவீத திறனில் செயல்பட அனுமதி..!! சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடரும்..!!
அபுதாபியில் உள்ள உணவகங்கள், காஃபி கடைகள், கஃபேக்கள் மற்றும் பிற உரிமம் பெற்ற உணவு நிலையங்கள் தற்பொழுது 80 சதவீத திறனில் இயங்கலாம் என்று அபுதாபியின் பொருளாதார மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்த நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய பல வழிகாட்டுதல்களும் இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
> பணியாளர்கள் நியமிக்கப்பட்ட சோதனை மையங்களில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை லேசர் அடிப்படையிலான DPI பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மேலும் வேலை நேரங்களில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஊழியரின் உடல் வெப்பநிலையை சரிபார்க்க வேண்டும்.
> அபுதாபி வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையம் (ADAFSA) கோடிட்டுக் காட்டிய வழிகாட்டுதல்களின்படி, பணியாளர்களால் வழங்கப்படும் பஃபேக்கள் உள்ள ஹோட்டல்களை தவிர, மற்ற அனைத்து பஃபேக்கள், திறந்த உணவு காட்சிகள் மற்றும் உணவு மாதிரிகள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
> அனைவரும் முக கவசங்கள் மற்றும் கையுறைகளை பயன்படுத்த வேண்டும்
> மேசைகளுக்கு இடையே இரண்டு மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
> மேசைக்கு அதிகபட்சம் நான்கு வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர வேண்டும்.
> தரைகள் மற்றும் உபகரணங்களை அடிக்கடி சுத்தம் மற்றும் சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.
> ஊழியர்களிடையே காய்ச்சல் அல்லது வைரஸ் அறிகுறிகள் ஏதேனும் தெரிந்தால் உடனடியாக சுகாதாரத் துறைக்கு (DoH) தெரிவிக்கப்பட வேண்டும்
இந்த புதிய சுற்றறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை அனைத்து உணவு விடுதிகளும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனங்களில் பணியாளர்கள் மற்றும் நுகர்வோரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்கும் அதே வேளையில், வணிக தொடர்ச்சியை உறுதி செய்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
.@AbuDhabiDED has issued a circular instructing restaurants, coffee shops, cafes and other licensed food outlets inside and outside malls to operate at 80% capacity. This follows measures implemented by Abu Dhabi Emergency Crisis & Disaster Committee for COVID-19 Pandemic. pic.twitter.com/39AK50XSIl
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) July 29, 2020