அமீரக செய்திகள்

ICA அனுமதி பெற்றவர்கள் இந்தியாவிலிருந்து அமீரகம் திரும்ப முன்பதிவு தொடக்கம்..!! விமான நிறுவனம் அறிவிப்பு..!!

கொரோனா வைரஸ் பாதிப்பினால் விதிக்கப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்து தடையின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் தாய் நாட்டிற்கு திரும்ப முடியாமலும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் விடுமுறை மற்றும் இன்ன பிற காரணங்களால் இந்தியாவிற்கு வந்து மீண்டும் தாங்கள் வசிக்கும் நாடுகளுக்கு செல்ல முடியாமலும் தவித்து வந்த வேளையில், இந்திய அரசாங்கத்தால் வந்தே பாரத் திட்டம் தொடங்கப்பட்டு தற்பொழுது வரையிலும் இலட்சக்கணக்கான இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

இருப்பினும், வெளிநாடுகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் இந்தியர்களில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த பலரும் தாங்கள் பணிபுரியும் நாடுகளுக்கு திரும்பி செல்ல முடியாமலும் வேலை இல்லாத காரணத்தினால் மாத சம்பளம் இல்லாமலும் இன்று வரையிலும் தவித்து வருகின்றனர். குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரக அரசானது கடந்த ஜூன் மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தின் (ICA) அனுமதி பெற்ற அமீரக குடியிருப்பாளர்கள் மீண்டும் அமீரகம் திரும்பலாம் என அறிவித்தும் பல இந்தியர்களால் விமான சேவை இல்லாத காரணங்களினால் பயணிக்க இயலாமல் போய்விட்டது.

அமீரக வாழ் இந்தியர்கள் பலரும் இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு வருவதற்கு பல நாட்கள் காத்துக்கிடந்ததன் பலனாக, தற்பொழுது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஜூலை 12 முதல் 26 வரை இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.


விமானங்களுக்கான டிக்கெட் புக்கிங்கை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் வலைத்தளம் வாயிலாகவோ, கால் சென்டர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தின் (ICA) மூலம் அனுமதி பெற்ற அமீரக குடியிருப்பாளர்கள் மட்டுமே விமானங்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் விமான நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

இதற்கு முன்னராக, சுகாதார ஊழியர்கள், மருத்துவம் மற்றும் பிற அவசர நிலை காரணமாக அமீரகம் வர வேண்டியவர்கள் என மிகவும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே இந்தியர்கள், தூதரகத்தின் உதவியுடன் அமீரகம் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!