அமீரக செய்திகள்

எமிரேட்ஸ் விமானத்தில் பயணிப்பவர்களுக்கு 640,000 திர்ஹமில் இலவச கொரோனா மருத்துவ காப்பீடு வழங்கப்படும்..!! விமான நிறுவனம் அறிவிப்பு..!!

துபாயை சேர்ந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனமானது தங்கள் பயணிகளின் கொரோனாவிற்கான இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை வழங்கும் என அறிவித்துள்ளது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ள இந்த தனித்துவமான சலுகையின்படி, விமானப் பயணத்தின் போது பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு 638,363 திர்ஹம் (150,000 யூரோக்கள்) மருத்துவ செலவுகளையும், ஒரு நாளைக்கு 425.5 திர்ஹம் (100 யூரோக்கள்) என 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதற்கான செலவுகளையும் வழங்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த சேவைகள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பயணிகளுக்கு வழங்கப்படும் இந்த காப்பீடு திட்டமானது அவர்கள் செல்ல வேண்டிய இடம் மற்றும் அவர்கள் விமானத்தில் பயணித்த வகுப்புகளை (Class) கருத்தில் கொள்ளாமல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய காப்பீடு திட்டமானது, வரும் அக்டோபர் 31, 2020 வரை எமிரேட்ஸில் பயணம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக இது செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. பயணிகள் எமிரேட்ஸில் பயணிக்கும் முதல் நாளிலிருந்து 31 நாட்களுக்கு இது செல்லுபடியாகும் என்றும் கூறியுள்ளது. இதனடிப்படையில், எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் பயணிகள் சென்றடைந்த நகரத்திலிருந்து வேறு நகரத்திற்கு சென்றாலும், எமிரேட்ஸ் வழங்கிய சேவைகளை பயணிகள் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக வாடிக்கையாளர்கள் பயணம் செய்வதற்கு முன்பு எந்தவொரு படிவத்தையும் பதிவு செய்யவோ அல்லது நிரப்பவோ தேவையில்லை என்றும்
பயணத்தின் போது எவரேனும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் அவர்கள் எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள ஒரு பிரத்யேக ஹாட்லைனை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஹாட்லைன் எண் மற்றும் கோவிட் -19 தொடர்பான செலவுகள் என்ன என்பது பற்றிய விவரங்கள் அறிய www.emirates.com/COVID19assistance என்ற வலைத்தளத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் அவர்கள் இது பற்றி கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் உத்தரவின் பேரில், பயணிகளின் சர்வதேச பயணத்திற்கான நம்பிக்கையை அதிகரிப்பதில் எமிரேட்ஸ் பெருமை கொள்கிறது. உலகெங்கிலும் உள்ள சர்வதேச போக்குவரத்திற்குண்டான தடைகள் படிப்படியாக மீண்டும் திறக்கப்படுவதால் மக்கள் மற்ற நாடுகளுக்கு செல்ல ஆசைப்படுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்”.

“இருப்பினும், அவர்கள் பயணத்தின் போது எதிர்பாராத ஒன்று நடக்காமல் இருப்பதற்காக அவர்கள் உத்திரவாதத்தை எதிர்பார்க்கிறார்கள். எனவே, நோய்த்தொற்று அபாயத்தைத் தணிக்க பயணத்தின் போது ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு கடுமையாக உழைத்து வருகிறோம். மேலும் பயணிகளுக்கு எளிதில் சேவைகளை வழங்குவதற்காக எங்கள் முன்பதிவு கொள்கைகளையும் புதுப்பித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், “இப்போது அதன் அடுத்த கட்டமாக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பயணத்தின் போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் கொரோனாவிற்கான மருத்துவ செலவுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட செலவுகளை இலவசமாக வழங்க இருக்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கே நாங்கள் முன்னுரிமை தருகிறோம். அவர்கள் எங்களின் இந்த முயற்சியை வரவேற்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் கூறியுள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!