அபுதாபி பிக் டிக்கெட் டிராவில் 15 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை வென்ற இந்தியர்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பிக் டிக்கெட் ரேஃபிள் டிராவில் (Big Ticket raffle draw) துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவர் 15 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை தட்டிச்சென்றுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் அபுதாபியில் நடைபெறும் பிக் டிக்கெட் டிராவில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையும், உயர் ரக வாகனங்களும் பரிசாக வழங்கப்படும். தற்பொழுது இந்த மாதத்திற்கான பிக் டிக்கெட் ரேஃபிள் டிராவானது (Big Ticket raffle draw) இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த நவுபல் மாயன் கலாதில் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு 15 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையானது கிடைத்துள்ளது.
இது குறித்து அவர் கூறும் போது, “நான் வீட்டில் நேரலையில் பிக் டிக்கெட் ரேஃபிள் டிராவை பார்த்துக்கொண்டிருந்தேன். வெற்றியாளராக என் பெயரை அறிவித்ததும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். எனக்கு கிடைத்த பரிசுத் தொகையை மற்ற 20 பேருடன் பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன். மிக்க நன்றி” என்று கூறியுள்ளார். இவர் தனது டிக்கெட்டை ஜூன் 25 அன்று வாங்கியிருந்ததாக தெரிவித்துள்ளார்.
பிக் டிக்கெட் அபுதாபியானது தற்பொழுது ‘Living the Dream’ என்று ஒரு புதிய ப்ரொமோஷனை அறிவித்துள்ளது. இதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலி நபருக்கு ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதத்திற்கான டிக்கெட்டை வெல்ல முடியும் என்று கூறியுள்ளது.
இதன்படி, ஜூலை 13 முதல் 24 வரை, தனிநபர்கள் தனிமைப்படுத்தலின் போது மேற்கொண்டு வரும் தங்களின் திறமைகள் அல்லது பொழுதுபோக்குகளை கொண்ட அதிகபட்சம் 15 வினாடிகள் அடங்கிய வீடியோக்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபர் ஒவ்வொரு மாதமும் ஒரு பிக் டிக்கெட்டை ஆண்டு முழுவதும் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.