இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்ட அமீரக விசா செல்லுபடி காலம் ரத்து..!! புதிய விதிகள் பற்றிய சந்தேகங்களும் விளக்கங்களும்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்றுநோய் பரவ தொடங்கியதையடுத்து வெளிநாட்டவர்களின் விசாக்கள், நுழைவு அனுமதி, குடியிருப்பு மற்றும் எமிரேட்ஸ் ஐடி உள்ளிட்டவை தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாள மற்றும் தேசியத் துறையினால் வெளியிடப்பட்டிருந்த முடிவுகளில் அமீரக அமைச்சரவை தற்பொழுது பல திருத்தங்களை மேற்கொண்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அது குறித்த சந்தேகங்களும் விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கேள்வி 1: மார்ச் 1 ம் தேதிக்குப் பிறகு விசா காலாவதியானவர்களுக்கு இந்த முடிவு பொருந்துமா?
அமீரகத்திற்குள் இருக்கும் வெளிநாட்டவர்களில் மார்ச் 1 ம் தேதிக்குப் பிறகு காலாவதியான விசா மற்றும் நுழைவு அனுமதி கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் வரை விசா நீட்டிக்கப்பட்டிருந்தது தற்பொழுது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், மார்ச் 1 ம் தேதி முதல் காலாவதியான எமிரேட்ஸ் ஐடி (Emirates ID) இந்த ஆண்டு டிசம்பர் இறுதி வரை செல்லுபடியாகும் என அறிவித்திருந்த முடிவும் தற்பொழுது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேள்வி 2: இந்த தீர்மானம் எப்போது நடைமுறைக்கு வருகிறது?
இந்த தீர்மானம் இன்று, ஜூலை 11 முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
கேள்வி 3: குடியிருப்பாளர்கள் சேவைகளுக்கான கட்டணத்தை எப்போது செலுத்த வேண்டும்?
ஜூலை 12, 2020 முதல் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடிய சேவைகளுக்கு கட்டணங்களை வசூலிக்கத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேள்வி 4: ஆவணங்களை புதுப்பிக்க வழங்கப்பட்டுள்ள அவகாசம் எத்தனை நாள்?
அமீரக குடிமக்கள், GCC நாட்டவர்கள் மற்றும் அமீரகத்திற்கு உள்ளே வசிக்கும் குடியிருப்பாளர்கள் ஆகியோருக்கு மூன்று மாதங்கள் தங்கள் காலாவதியான ஆவணங்களை புதுப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்படும் என அமைச்சரவை தெரிவித்துள்ளது. மேலும், அமீரகத்திற்கு வெளியே 6 மாதங்களுக்கும் குறைவாக தங்கியிருந்த அமீரக குடிமக்கள், GCC நாட்டவர்கள் மற்றும் அமீரக குடியிருப்பாளர்கள், அமீரகத்திற்கு திரும்பி வந்த நாளிலிருந்து தங்களது காலாவதியான ஆவணங்களை புதுப்பிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கேள்வி 5: மார்ச் 1 முதல் காலாவதியான விசாவை கொண்டு வெளிநாடுகளில் இருப்பவர்கள் என்ன செய்வது?
வெளிநாடுகளில் இருக்கும் அமீரக குடியிருப்பாளர்களில் மார்ச் 1, 2020 க்குப் பிறகு காலாவதியான விசாக்களை கொண்டிருப்பவர்கள் மற்றும் அமீரகத்தை விட்டு வெளியே 6 மாதங்களுக்கு மேல் தங்கியிருக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் அனைவரும் இரு நாடுகளுக்கும் இடையேயான விமானப் போக்குவரத்து துவங்கப்படும் பட்சத்தில் அமீரகம் திரும்புவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source : Khaleej Times