20 வருடங்களாக தாயகம் செல்ல முடியாமல் அமீரகத்தில் தவித்த தமிழர்..!! நாடு திரும்ப உதவிக்கரம் நீட்டிய தன்னார்வலர் குழு..!!
இந்தியாவிலிருந்து பல கனவுகளுடன் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு புதிய வேலை விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்த தமிழகத்தை சேர்ந்த ஒருவர், இதுநாள் வரையிலும் இந்தியா திரும்பாமலேயே தனது வாழ்நாளில் 20 வருடங்களை குடும்பத்தை பிரிந்து அமீரகத்திலேயே கழித்து வந்துள்ள சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மதியழகன் என்பவர் தனது 36 ஆவது வயதில் கடந்த 2000-ம் ஆண்டு ஏஜென்ட் மூலமாக புதிய வேலை விசா பெற்று அமீரகம் வந்துள்ளார். அவருக்கு வேலை வாங்கி தருவதாகக்கூறி விசாவில் அமீரகத்திற்கு அழைத்து வந்த ஏஜென்ட், விசா அடிப்பதற்கு முன்பாகவே அவரின் பாஸ்ப்போர்ட்டை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார். பலமுறை அவரை தொடர்புகொள்ள முயன்றும் பயனளிக்காததால் கையில் பாஸ்போர்ட் இல்லாமலும், விசா அடிக்க இயலாமலும், இந்தியாவிற்கு திரும்ப முடியாமலும் தவித்த மதியழகன் அன்று முதல் இன்று வரையிலும் அதே தவிப்பில் இந்தியா செல்வதற்கான நாட்களை எண்ணிக்கொண்டும், அதற்கான வாய்ப்புகளை எதிர்நோக்கியும் தனது காலத்தை கடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், 20 வருடங்களாக வீடு திரும்ப முடியாமல் தவித்து வந்த மதியழகனின் விபரங்கள், அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவிப்பவர்கள் மற்றும் இன்னபிற அவசர உதவி தேவைப்படுபவர்களுக்கு தேடிச்சென்று உதவும் தன்னார்வலர் குழுவின் அமைப்பாளர் மஹாதேவன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அக்குழுவினர்களின் முயற்சியினால் மதியழகன் அவர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் தற்பொழுது முழுவீச்சில் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மஹாதேவன் அவர்கள் கலீஜ் தமிழிடம் (Khaleej Tamil) கூறியதாவது, “20 வருடங்களுக்கு முன்னால் ஏஜென்ட்டால் ஏமாற்றப்பட்டு இன்று வரையிலும் இந்தியா செல்ல முடியாமல் தவித்துவரும் தமிழரின் செய்தியை கேட்டு எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாய் இருந்தது. அவரை நேரில் சந்தித்து அவர் நாடு திரும்புவதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தோம். தற்போது கடவுளின் கருணையால் அவர் இந்தியா செல்வதற்கான அனைத்து ஆவண பட்டியலும் (Documentation) சமர்ப்பிக்கப்பட்டு அமீரக அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இறுதியாக இந்திய தூதரகத்திடமிருந்து பயண அனுமதி (Out Pass) பெறுவதற்கு நாளை இந்திய தூதரகம் செல்ல இருக்கிறோம்” என்று கூறினார்.
மேலும் மஹாதேவன் அவர்கள் கூறுகையில், மதியழகன் அவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் இருப்பதாகவும், 19 வயது நிரம்பிய இளைய மகளை அவர் இதுவரையிலும் நேரில் பார்த்ததில்லை என தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் விசா இல்லாத காரணத்தினால் அவரின் மூத்த மகளின் திருமணத்திற்கு செல்ல முடியாமல் போனதை எண்ணி அவர் மனம் வருந்தியதாகவும், இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது தனது குடும்பத்துடன் அவர் மீண்டும் இணைய இருப்பதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறினார்.
20 வருடங்களாக விசா இல்லாமல் தவித்து வந்த மதியழகன், கடந்த காலங்களில் அமீரகத்தில் மேற்கொள்ளப்பட்ட பொதுமன்னிப்பின் மூலமாக இந்தியா திரும்புவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டும் அது பயனளிக்காமல் போய்விட்டது. இறுதியாக தன்னார்வலரான மஹாதேவன் மற்றும் அவரது குழுவினரின் பெருமுயற்சியால் தற்போது அவர் சொந்த ஊருக்கு திரும்புவது சாத்தியமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வேலை தேடி விசிட்டில் வந்த பெண்மணியை மீட்ட மஹாதேவன் மற்றும் குழுவினர்…
இதே போன்று திருச்சியிலிருந்து விசிட் விசாவில் வீட்டு வேலை (House maid) தேடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்து கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடிகளினால் இரு மாதங்களாக அமீரகத்தில் சிக்கித்தவித்த 57 வயதுடைய நூர் நிஷா எனும் பெண்மணியையும் மீட்டு மஹாதேவன் அவர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ள சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.
இது குறித்து மஹாதேவன் அவர்கள் கூறுகையில், “கலீஜ் தமிழில் (Khaleej Tamil) வந்திருந்த செய்தியை அறிந்து (மஹாதேவன் அவர்கள் தன்னார்வலராக செய்யக்கூடிய பணிகள் பற்றி நாங்கள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம்) நூர் நிஷா என்ற பெண்மணி என்னை தொடர்பு கொண்டார். மூன்று பெண் பிள்ளைகளுக்கு அம்மாவாகிய அந்த பெண்மணி தனது மூன்றாம் மகளின் திருமணத்திற்காக வாங்கிய கடனை திருப்பி அடைப்பதற்காக, வீட்டு வேலை தேடி அமீரகம் வந்ததாகவும், தற்போதையை நெருக்கடியான சூழ்நிலையில் வேலை கிடைக்காமல் சிரமப்படுவதாகவும் தெரிவித்தார். உடனடியாக அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து சிறப்பு விமானம் மூலம் திருச்சிக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு தற்போது அவர் தனது குடும்பத்துடன் இனைந்து விட்டார்” என்று கூறினார்.
குடும்பத்தினருடன் தொடர்பின்றி மன அழுத்தத்தில் தவித்த தமிழரை மீட்ட குழுவினர்…
மேலும், கலீஜ் தமிழில் வந்திருந்த செய்தியை அறிந்து திருச்சியிலிருந்து மற்றொரு நபர் மஹாதேவன் அவர்களை தொடர்பு கொண்டு, அவரின் சகோதரர் சிராஜுதீன் என்பவர் வேலை தேடி அமீரகம் வந்திருந்த நிலையில், தற்போது அவரை பற்றிய எந்த தகவலும் எங்களுக்கு தெரியவில்லை எனவும், அவர் நிலை அறியாமல் தாய் மற்றும் மனைவி, குழந்தைகள் தவித்து வருவதாகவும், அவரை கண்டுபிடித்து ஊருக்கு அனுப்பிவைக்க உதவுமாறும் கேட்டுள்ளார்.
பிறருக்கு உதவுவதில் முன்னோடியாக இருக்கக்கூடிய மஹாதேவன் அவர்கள், பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஒரு வாரத்திற்குள்ளாகவே தனது குழுவினர்கள் உதவியுடன் ஷார்ஜாவின் அல் சஜ்ஜா இண்டஸ்ட்ரியல் ஏரியாவில் (Al Sajja Industrial Area) அமைந்துள்ள ஒரு கேம்ப்பில் மன அழுத்தத்திற்கு உள்ளாகி சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இருந்த சிராஜுதீனை கண்டறிந்து அவருக்கு தேவையான உதவிகளையும் தற்போது செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் மன அழுத்தத்தில் இருக்கும் சிராஜுதீனை உடனடியாக இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் தூதரகத்தின் உதவியுடன் முடிக்கப்பட்டுள்ளதாகவும், அமீரகத்திலிருந்து வரக்கூடிய நாட்களில் திருச்சிக்கு செல்லவிருக்கும் சிறப்பு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட இருப்பதாகவும் மஹாதேவன் கூறினார். மேலும் “சிராஜுதீனின் தகவல்கள் திருச்சி மாவட்ட ஆட்சியாளர் சிவராசு மற்றும் தாசில்தார் மணி ஆகியோரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் வருகைக்கு தேவையான உதவிகளை செய்வதாக இருவரும் உறுதி அளித்துள்ளனர்” எனவும் மஹாதேவன் அவர்கள் கலீஜ் தமிழிடம் தெரிவித்தார்.
இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் தவிக்கும் எண்ணற்ற தமிழர்களுக்கு முன்னோடியாய் நின்று தேவையான உதவிகளை தன்னார்வலர்களாக நேரில் சென்று செய்து வரும் மஹாதேவன் மற்றும் அவரது குழு உறுப்பினர்களான ஸ்டாலின், சிந்து அனந்தா, ரிஸ்வானா ஆசிஃபா, வித்யா பாலகிருஷ்ணன் மற்றும் கண்ணபிரான் ஆகியோரின் சேவை பெரிதும் மகத்தானது. அவர்களின் இந்த உகந்த பணிக்கு அமீரக தமிழர்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறது கலீஜ் தமிழ் குழு.
அமீரகத்தில் தவிக்கும் தமிழர்களுக்கு உதவி செய்து வரும் இக்குழுவினரிடத்தில் தாயகம் செல்ல விமான பயணத்திற்கான டிக்கெட் உதவி கோருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால், இது போன்று தேவையை எதிர்நோக்கியிருக்கும் நம் தமிழக சொந்தங்களுக்கு உதவ முற்படுபவர்கள், இக்குழுவினரை தொடர்புகொண்டு இந்த நற்பணியில் தங்களையும் இணைத்துக்கொள்ளலாம் என மஹாதேவன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.