அமீரகத்தில் வசிக்கும் மக்கள் வெளிநாடு செல்லலாம்..!! புதிய விதிமுறைகள் வெளியீடு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் அமலில் இருந்த விமான போக்குவரத்து இயக்கம் மீதான தடைகளை அமீரக அரசு நீக்கி, அமீரகத்தில் வசிக்கக்கூடிய குடியிருப்பாளர்கள் மற்றும் அமீரக குடிமக்கள் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்து அதற்கான நிபந்தனைகளையும் வழிமுறைகளையும் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், அமீரக அரசானது ஏற்கெனவே அறிவித்திருந்த வெளிநாடு செல்ல விரும்பும் அமீரக குடியிருப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட வழிமுறைகளை தற்பொழுது தளர்த்தியுள்ளது.
இதனடிப்படையில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொந்தமான விமான நிறுவனங்களான எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் விமானங்கள் தங்களின் விமான சேவைகளை வழங்கக்கூடிய உலகின் அனைத்து இடங்களுக்கும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் எமிரேட்ஸ் மற்றும் எத்திஹாட் விமான நிறுவனங்களானது உலகம் முழுவதும் உள்ள 50 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு தங்களுடைய விமான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பயணம் செல்ல விரும்புபவர்கள் கொரோனாவிற்கான அனைத்து கட்டாய முன்னெச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான ஃபெடரல் அதிகாரசபைக்கு (ICA) வெளிநாடு செல்வதற்கான அனுமதி வேண்டி விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் அமீரகத்தில் இருக்கும் குடியிருப்பாளர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு செல்லவும், மேலும் அமீரகத்தில் இருக்கும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கோடை விடுமுறைக்காக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளவும் உதவும் வகையில் தற்பொழுது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பயணம் மேற்கொள்வதற்கான சுகாதார நெறிமுறைகளாக பயணிகள் செல்ல விரும்பும் வெளிநாடுகளில் தனிமைப்படுத்தல், பயணத்திற்கு முந்தைய மற்றும் பயணத்திற்கு பிந்தைய கோவிட் -19 பரிசோதனைகள், தேவைப்பட்டால் அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பியதற்கு பின் தனிமைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணம் மேற்கொள்பவர்கள் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை Al Hosn அப்ளிகேஷன் மூலமாகவோ அல்லது மருத்துவ சான்றிதழ் மூலமாகவோ உறுதி செய்ய வேண்டும் எனவும் கொரோனா பரிசோதனையில் நெகடிவ் சோதனை முடிவை பெற்றவர்கள் மட்டுமே வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் சர்வதேச சுகாதார காப்பீட்டை பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் திரும்பும் குடியிருப்பாளர்கள் அரசு வெளியிட்டிருக்கும் அமீரகம் திரும்புபவர்களுக்கான விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.