அமீரக செய்திகள்

மகனிற்காக சேமித்ததை சமூகப்பணிகளில் செலவிடும் தந்தை..!! 61 பேரின் விமானப் பயண டிக்கெட்டிற்கும் நிதியுதவி..!!

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸின் போது ஏற்பட்ட ஒரு கார் விபத்தில் தனது 19 வயது மகனை இழந்த தந்தையான கிருஷ்ணகுமார், ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கித் தவிக்கும் 61 இந்தியர்களின் திருப்பி அனுப்பும் நடவடிக்கைக்கு நிதியுதவி அளித்து உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் தான் உறுப்பினராக உள்ள அனைத்து கேரள கல்லூரிகளின் முன்னாள் மாணவர் கூட்டமைப்பு (All Kerala Colleges Alumni Federation, Akcaf) எனும் தன்னார்வ குழுவானது ஜூலை 25 அன்று ஃப்ளைதுபாய் விமானம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு தனி விமானத்தில், 199 பயணிகளை துபாயிலிருந்து கொச்சிக்கு திருப்பி அனுப்பியதாக கூறியுள்ளார். மேலும், இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் 55 பேருக்கு விமான டிக்கெட்டிற்கான நிதியுதவி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துறையின் (Sales and Marketing) இயக்குநராகப் பணிபுரிந்து வரும் அவர் தனது 19 வயதான மகன் ரோஹித் கிருஷ்ணகுமாரை கடந்த வருடம் ஏற்பட்ட ஒரு கார் விபத்தில் பறிகொடுத்துள்ளார். அந்த விபத்தின் போது அவரது மகனின் நண்பர் ஷரத் குமார் (வயது 21) என்பவரும் உயிரிழந்திருக்கிறார்.

திருப்பி அனுப்பும் நடவடிக்கை குறித்து அவர் கூறும் போது “இந்திய தூதரகத்தில் இந்தியாவிற்கு செல்ல வேண்டி பதிவு செய்திருந்த அனைத்து பயணிகளும் Ackaf தன்னார்வ குழு இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த இணையதளத்தில் பதிவு செய்தவர்களின் விண்ணப்பங்களை வைத்து அவர்களுக்கு இந்தியாவிற்கு செல்ல வேண்டி தேவை உள்ளதா மற்றும் அவருக்கு நிதிஉதவி உண்மையாகவே தேவைப்படுகிறதா என்பதை அவர்களின் வீட்டிற்கு சென்று உறுதிப்படுத்திக்கொள்வோம்” என்று கூறியுள்ளார்.

சமுதாயப் பணிகளில் தன்னை அர்ப்பணிக்கத் தூண்டியது குறித்து அவர் கருத்து கூறும்போது, “எனது மகன் இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவராக கல்வி பயின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் விடுமுறைக்காக வீடு திரும்பியிருந்த போது அந்த கோரமான விபத்து நிகழ்ந்தது. எனது மகனிற்காக பல கனவுகளை வைத்திருந்த எனக்கு அந்த நிகழ்வு எனது வாழ்க்கையையே உலுக்கிவிட்டது. இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலைகளில் கையில் பணம் இருந்தாலும் அதனால் ஒரு பயனும் இருக்காது. அப்போதிருந்து, நான் நிறைய சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன். நான் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டால் நான் வாழும் இந்த வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை” என்று கூறியுள்ளார்.

image credit : Gulf News

கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்து கிருஷ்ணகுமார் உறுப்பினராக இருக்கும் இந்த குழு உதவி தேவைப்படும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு ஆதரவளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், “வேலையில்லாதவர்களுக்கு பல நூறு பைகள் மளிகை மற்றும் பிற தேவையான பொருட்களை வழங்கி நாங்கள் அவர்களை ஆதரித்தோம். அதனை தொடர்ந்து நோயாளிகளை வார்சன் (Warsan) போன்ற மருத்துவ மையங்களுக்கு மாற்றுவது போன்ற உதவிகளையும் செய்துள்ளோம்,” என்றும் அவர் கூறினார்.

கிருஷ்ணகுமார் தொடர்ந்து கூறும் போது, “நான் மிகவும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். கல்லூரியில் படிக்க எனக்கு உதவித்தொகை கிடைத்தது. அரசிற்கு வரி செலுத்தும் ஒவ்வொருவரின் பணத்தின் உதவியுடன் படித்தேன். தற்பொழுது நான் அதனை சமூகத்திற்குத் திருப்பித் தர விரும்புகிறேன். நான் வாழ்க்கையில் தற்போது உயர்ந்த இடத்தை எட்டியுள்ளேன். இப்போது திருப்பித் தர வேண்டிய நேரம்” என்று கூறியுள்ளார்.

அவர் கேரள அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வித் திறமை வாய்ந்த 1,000 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளின் கல்விக்கும் நிதியுதவி செய்து வருகிறார். மேலும், திருவனந்தபுரத்தில் இருக்கக்கூடிய ஒரு பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் நற்பணி மன்றத்தில் வாழ்நாள் அறங்காவலராகவும், இது போன்று கல்வித்துறைக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!