அபுதாபி : பாதசாரிகளுக்கு வழிவிடாததால் 15,000 க்கும் மேற்பட்ட ஓட்டுனர்களுக்கு 500 திர்ஹம் அபராதம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் அபுதாபியில், இந்த ஆண்டில் இதுவரையிலும் கணக்கெடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களில் 15,000 க்கும் மேற்பட்ட விதிமீறல்களானது பாதசாரிகளுக்கென குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களில் (Pedestrian Crossing) அவர்களுக்கு வழிவிடாத வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்ட அபராதங்கள் என்று அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜனவரி முதல் ஜூன் இறுதி வரையிலான இந்த ஆண்டின் முதல் பாதியில் மேற்கூறிய போக்குவரத்து விதிகளை 15,588 க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீறியுள்ளதாகவும், வாகன ஓட்டிகள் பாதசாரிகளுக்கு வழிவிடுமாறும், பாதசாரிகளுக்கான இடங்களில் செல்லும் போது வேகத்தை குறைத்து செல்லுமாறும் அபுதாபி காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகம் வலியறுத்தியுள்ளது.
இவ்வாறு பாதசாரிகளுக்கு வழிவிடாமல் செல்லும் வாகனங்களுக்கு 500 திர்ஹம் அபராதத்துடன் 6 கரும்புள்ளிகள் (Blackpoints) வாகன ஓட்டிகளுக்கு அளிக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
மேலும், பாதசாரிகளுக்கான இடங்களில் வாகனத்தை நிறுத்தும் ஓட்டுனர்களுக்கு 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.