‘Entry Allowed’ மெசேஜ் பெறாமல் பயணித்த 192 குடியிருப்பாளர்களை திருப்பி அனுப்பிய அமீரகம்..!!
வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் குடியிருப்பாளர்கள் ஐக்கிய அரபு அமீரகம் திரும்புவதற்கு அடையாள மற்றும் குடியுரிமை ஆணையத்தின் (ICA) முன் ஒப்புதல் பெற தேவை இல்லை என ICA அறிவித்ததை தொடர்ந்து, தங்கள் பயண ஆவணங்களின் செல்லுபடியை ICA வின் https://uaeentry.ica.gov.ae என்ற இணையதளத்தில் சரிபார்க்காமல் அமீரகம் திரும்பி வந்து நாட்டிற்குள் நுழைய அனுமதி கிடைக்காமல் விமான நிலையங்களில் சிக்கித்தவித்த 192 வெளிநாட்டவர்களும் தற்போது அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ICA வின் ‘Entry Allowed’ எனும் பச்சை நிறத்திலான தகவலை பெறாமல் பயணித்த 192 வெளிநாட்டவர்களில் 127 பேர் பங்களாதேஷ் நாட்டவர்கள் என்பதும், 65 பேர் இந்திய நாட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. விமான நிலையத்தில் சிக்கித்தவித்த இவர்கள் அனைவரும் தங்கள் நாட்டிற்கு திரும்பி சென்று விட்டனர் என இரு நாட்டு தூதரகங்களும் அறிவித்துள்ளது.
இந்திய தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் நீரஜ் அகர்வால் கூறுகையில், இந்தியாவிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் மூலம் ஷார்ஜா வந்த 43 இந்தியர்களும், அதேபோன்று லக்னோவிலிருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் ஷார்ஜா வந்த 18 இந்தியர்களும் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதி மறுக்கப்பட்டு விமான நிலையத்தில் சிக்கித்தவித்ததாகவும், தற்போது அவர்கள் இந்தியாவிற்கு திரும்பி சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பங்களாதேஷ் தூதர் கூறுகையில், ஏர் அரேபியா மற்றும் பிமன் ஏர்லைன்ஸ் ஆகிய இரண்டு விமானங்கள் மூலம் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் பங்களாதேஷிலிருந்து அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த 127 பயணிகள், விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படாததால் அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் என்று கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மற்றும் ஷார்ஜா விமான நிலையத்திற்கு வரும் குடியிருப்பாளர்களுக்கு ICA முன் அனுமதி பெற தேவையில்லை என்றாலும், https://uaeentry.ica.gov.ae என்ற போரட்டலில் தங்களின் எமிரேட்ஸ் ஐடி மற்றும் பாஸ்போர்ட் தகவலை கொண்டு விசா செல்லுபடியை சரிபார்க்கும்போது, ‘Entry Allowed’ என்று பச்சை நிறத்தில் மெசேஜ் வரும் குடியிருப்பாளர்கள் மட்டுமே தற்பொழுது பயணத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.