அபுதாபி : மாணவர்கள் விரும்பினால் தொலைதூரக்கல்வியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்..!! ADEK ஒப்புதல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவின் பாதிப்பினால் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு கடந்த மார்ச் மாதம் முதல் தொலைதூர கல்வி முறை நடைமுறையில் இருந்து வந்தது. அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக அபுதாபி கல்வி மற்றும் அறிவுத்துறை (Adek) வெளியிட்டிருந்த அறிவிப்பில், அபுதாபியில் இருக்கக்கூடிய பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் மீண்டும் திறக்கப்படும் என்றும் கொரோனாவிற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிவித்திருந்தது.
மேலும், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பாக ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள் என அனைவரும் கொரோனாவிற்கான பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் அபுதாபி கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அபுதாபியில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் தொலைதூரக் கற்றலைத் தேர்வுசெய்யலாம் என்ற புதியதொரு அறிவிப்பை அபுதாபி கல்வி மற்றும் அறிவுத்துறை தெரிவித்துள்ளதாக அமீரகத்தின் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து அபுதாபி கல்வி மற்றும் அறிவுத் துறை (ADEC), “தங்கள் குழந்தைகளுக்கு தொடர்ந்து தொலைதூரக் கல்வியை வழங்க விரும்பும் பெற்றோரின் வலுவான கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக ADEC, கோடை விடுமுறைக்கு பிறகு வரவிருக்கும் கல்வி ஆண்டில் முழுநேர தொலைதூரக் கல்விக்கான விருப்பத்தை அங்கீகரித்துள்ளது. மேலும், தங்களின் கோரிக்கைகளைக் கூறுவதற்கும், புகாரளிப்பதற்கும் பெற்றோர்கள் 800-COMPLIANC(E) / 800-266754262 என்ற புதிய ஹாட்லைன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.