அபுதாபி வரும் அமீரக குடியிருப்பாளர்களுக்கு ICA அனுமதி தேவை இல்லை..!! ஆகஸ்ட் 11 முதல் அமலுக்கு வருவதாகவும் தகவல்..!!
வெளிநாடுகளில் இருக்கும் அமீரக குடியிருப்பாளர்களில் செல்லுபடியாகும் அமீரக விசா வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் திரும்புவதற்கு ICA அல்லது GDRFA ஒப்புதல் பெறுவது கட்டாயம் என இருந்துவந்த நிலையில், தற்போது நாளை ஆகஸ்ட் 11 முதல் அபுதாபி சர்வதேச விமான நிலையம் வரும் அமீரக குடியிருப்பாளர்களுக்கு ICA ஒப்புதல் பெற தேவையில்லை என அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால் செல்லுபடியாகும் விசா வைத்திருக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் ICA அனுமதி இல்லாமலேயே அபுதாபி சர்வதேச விமான நிலையம் வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் செல்லுபடியாகும் அமீரக ரெசிடென்ட் விசா கொண்ட ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள், அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய அதிகாரசபையிடமிருந்து (ICA) பயண அனுமதி பெற தேவையில்லை என்று அபுதாபி விமான நிலையம் மூலம் இன்று விமான நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து ஊடகம் மூலம் விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டதில், விமான நிறுவனமும் இதனை உறுதிப்படுத்தியதாக அந்த செய்தில் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் துபாய் தவிர்த்து மற்ற பகுதிகளான ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, உம் அல் குவைன், ஃபுஜைரா போன்ற விசாக்கள் வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் அபுதாபி விமான நிலையத்திற்கு வருவதாக இருந்தால், ICA ஒப்புதல் பெறத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அபுதாபி சர்வதேச விமான நிலையம் வரும் விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மற்ற பகுதிகளான துபாய் மற்றும் ஷார்ஜா விமான நிலையங்களுக்கு தற்போதைய நடைமுறையே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICA அனுமதி தவிர்த்து தற்போது பயணம் தொடர்பாக கடைபிடிக்கப்படும் கொரோனாவிற்கான நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் உட்பட அனைத்து நடைமுறைகளும் தொடர்ந்து பின்பற்றப்படும் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.