அமீரக செய்திகள்

UAE : கொரோனாவிற்கான விதிமுறைகளை மீறினால் 3 நாள் சம்பளம் குறைக்கப்படும்..!! அரசுத்துறை ஊழியர்களுக்கு மனித வள ஆணையம் எச்சரிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் தங்கள் பணியிடத்தில் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை விதிமுறைகளை மீறினால் மூன்று நாள் சம்பளக் குறைப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று அமீரகத்தின் மனித வளங்களுக்கான பெடரல் ஆணையம் (Federal Authority for Human Resources) எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அனைத்து அரசுத்துறை ஊழியர்களும் கொரோனாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வைரஸ் பரவாமல் தடுக்க வைக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மேலும், பணியிடத்தில் கொரோனாவிற்கான விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் வழங்கப்பட்ட சுற்றறிக்கையில், அரசுத்துறையில் பணிபுரியும் அதிகாரிகள் தங்கள் ஊழியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு மனித வளங்களுக்கான பெடரல் ஆணையம் நினைவூட்டியுள்ளது. இதன் மூலம், கொரோனா பரவுவதைக் குறைக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆணையம் மற்றும் பிற அரசாங்க நிறுவனங்கள் முன்னர் வழங்கிய அறிவுறுத்தல்களை அவர்கள் முழுமையாக பின்பற்ற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

அனைத்து அரசு ஊழியர்களும் சமூக இடைவெளியை பராமரிக்கவும், முககவசம் அணியவும், மற்றும் இது போன்ற கொரோனா தொற்றுநோயின் போது பணிச்சூழலை பராமரித்தல் மற்றும் அலுவலகங்களில் இருந்து பணியாற்றுவது பற்றிய ஆணையம் அறிவுறுத்திய அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுமாறும் கூறப்பட்டுள்ளது.

விதிமீறல்கள் மற்றும் அபராதங்கள்

பணியிடத்தில் ஆணையம் அறிவித்துள்ள 12 விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், ஊழியர்கள் கை குலுக்கி கொள்வது, குறிப்பிடப்பட்டிருக்கும் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் ஒன்று கூடுவது, முக கவசம் அணியாமல் இருத்தல், தேவைப்படும்போது PCR பரிசோதனையை மேற்கொள்ளாமல் இருத்தல் மற்றும் கொரோனாவிற்கான அறிகுறிகள் தென்பட்டும் தங்களின் சுகாதார நிலையை நிறுவனத்திற்கு தெரிவிக்காமல் இருத்தல் போன்றவற்றிற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய மனிதவள ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

  • ஊழியர்கள் அலுவலகத்தில் முதல் மற்றும் இரண்டாவது முறை கை குலுக்கிக் கொண்டால் அவர்கள் எழுத்துப்பூர்வ எச்சரிக்கையை (written warning) எதிர்கொள்ள நேரிடும். மூன்றாவது முறையாக அதே தவறை செய்தால் அவர்களின் அடிப்படை சம்பளத்தில் (Basic Salary) இருந்து ஒரு நாள் சம்பளம் குறைக்கப்படும்.
  • முக கவசம் அணியாமால் அல்லது சமூக தூரத்தை பராமரிக்காமல் குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் ஒன்று கூடினால் அந்த ஊழியர்களுக்கு அவர்களின் முதல் குற்றத்திற்கான எழுத்துப்பூர்வ எச்சரிக்கை வழங்கப்படும். இரண்டாவது முறை அதே தவறை செய்தால் ஒரு நாள் சம்பளமும் மூன்றாவது முறையாக அதே தவறை செய்தால் மூன்று நாள் சம்பளமும் குறைக்கப்படும்.
  • ஊழியர் ஒருவர் கொரோனாவிற்கான நேர்மறை சோதனை முடிவைப் பெற்று அதனை தனது நேரடி மேற்பார்வையாளர் அல்லது மேலாளர் அல்லது சக ஊழியர்களிடம் இருந்து மறைத்து தொடர்ந்து அலுவலகத்திற்கு வருகை புரிந்தால் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வகை விதிமீறலுக்கு அதிகபட்சமாக அந்த ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 10 நாட்கள் சம்பளம் குறைக்கப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!