அமீரக செய்திகள்

UAE: புத்தாண்டை முன்னிட்டு 4 கி.மீ நீளத்திற்கு 10 நிமிடம் நடைபெறவுள்ள பிரம்மாண்ட வான வேடிக்கை நிகழ்ச்சி..!!

தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் 2020 ம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் புத்தாண்டிற்கான கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களை கட்ட தொடங்கியுள்ளன. அதிலும் எப்பொழுதுமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் அனைத்து நாட்டு மக்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பும் நாடு ஐக்கிய அரபு அமீரகம். அமீரகத்தில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிபாவில் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டமானது பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ளது.

துபாயில் மட்டுமல்லாது ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்ற பகுதிகள் முழுவதுமே புத்தாண்டு கொண்டாட்டமானது வான வேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் என சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், வரவிருக்கின்ற புத்தாண்டை முன்னிட்டு ராஸ் அல் கைமாவில் 10 நிமிட நேரத்திற்கு நீண்ட வான வேடிக்கை நிகழ்ச்சியானது பைரோடெக்னிக் டிஸ்ப்ளேயுடன் (pyrotechnic dipsplay) நான்கு கிலோமீட்டர் நீளத்தில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

4 கி.மீ நீளத்தில் 10 நிமிட நேரத்திற்கு நடக்கவிருக்கும் வான வேடிக்கை நிகழ்ச்சியானது ராஸ் அல் கைமாவின் அல் மர்ஜன் தீவுக்கு (Al Marjan Island) அருகே கடலுக்கு மேலே பல்வேறு வடிவங்கள் மற்றும் கருப்பொருள்கள் கொண்ட வெடிபொருட்களால் பின்னணி இசையுடன் நிகழ்த்தப்படும் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு #RAKNYE2021 புத்தாண்டு கொண்டாட்டமானது குடியிருப்பாளர்கள் இல்லாமல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், ராஸ் அல் கைமாவில் நடக்கவிருக்கின்ற இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தினை பொதுமக்கள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள், சமூக ஊடக சேனல்கள் மற்றும் raknye.com என்ற இணையதளத்தில் நேரடியாக கண்டு களிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்ற இடமான அல் ஹம்ரா வில்லேஜ் (Al Hamra Village) மற்றும் அல் மர்ஜன் தீவில் (Al Marjan Island) உள்ள ஹோட்டல்களில் பிரத்யேகமாக பார்க்கும் பகுதிகள் (dedicated viewing areas) அமைக்கப்பட்டிருக்கும் என்றும் ஹோட்டல் விருந்தினர்கள், குடியிருப்பாளர்கள், சிறப்பு நிகழ்வுகளின் டிக்கெட் வைத்திருப்பவர்கள் மற்றும் அல் மர்ஜன் தீவில் சுற்றியுள்ள உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஆகியோர் இப்பகுதிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற இருப்பதை முன்னிட்டு அல் மர்ஜன் தீவுக்குச் செல்லும் ஷேக் முகமது பின் சலீம் அல் காசிமி சாலையானது (The Sheikh Mohammed bin Salem Al Qasimi road) டிசம்பர் 31 மதியம் 2 மணி முதல் மூடப்படும் என்றும், குடியிருப்பாளர்கள், ஹோட்டல் மற்றும் உணவகங்களின் விருந்தினர்கள் மற்றும் அனுமதி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த சாலையை அணுக அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவானது அல் ஹம்ரா வில்லேஜ் பகுதிக்கும் அல் மர்ஜன் தீவுக்கும் இடையிலான சாலையில் பொதுமக்கள் பார்க்கும் தளங்களையும் (public viewing platforms) அங்கிருக்கும் கடற்கரை பகுதியையும் மூடும் என்றும், இது அல் ஹம்ரா வில்லேஜில் இருக்கும் மெரினா டவர்ஸுக்கு (Marina Towers) முன்னால் உள்ள திறந்த கடற்கரையும் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது. அத்துடன், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளின் ஒரு பகுதியாக விசிட்டர் பார்க்கிங் மற்றும் குழந்தைகளின் விளையாட்டு பகுதிகளுக்கு தடை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், ராஸ் அல் கைமா 2020 ஆம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டமானது (New Year’s Eve Gala of 2020) இது “ஒரே நேரத்தில் அதிக ஆளில்லா வான்வழி வாகனங்கள் மூலம் தொடர்ந்து பட்டாசுகளை வெடிக்கச் செய்தல்” (Most Unmanned Aerial Vehicles for Launching Fireworks Simultaneously) மற்றும் “மிக நீண்ட பட்டாசு நீர்வீழ்ச்சி” (Longest Fireworks Waterfall) ஆகியவற்றுக்கான கின்னஸ் உலக சாதனை பட்டங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!