அமீரக செய்திகள்

UAE: குப்பை தொட்டி இல்லாத கடைகள், வணிக நிறுவனங்களுக்கு 1,000 திர்ஹம்ஸ் அபராதம்..!! அபுதாபி நகராட்சி அறிவிப்பு..!!

அபுதாபி மாகாணத்திற்குட்பட்ட பகுதிகளில் குப்பை தொட்டிகள் இல்லாமல் காணப்படும் கடைகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களுக்கு 1,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்று அபுதாபி நகராட்சி அதன் உரிமையாளர்களை எச்சரித்துள்ளது. குப்பை தொட்டிகளுக்கு வெளியே கழிவுகளை சீரற்ற முறையில் வீசுவதைத் தடுப்பதற்கும், நகரின் தூய்மையைப் பேணுவதற்கும் “எங்கள் நகரத்தின் அழகு அதன் தூய்மைக்குள் உள்ளது” (The beauty of our city lies within its cleanliness) என்ற கருப்பொருளின் கீழ் நகராட்சியால் சமீபத்தில் தொடங்கப்பட்ட புதிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பல்வேறு சமூக ஊடக தளங்களில் செய்திகளைப் பரப்புவதை உள்ளடக்கிய இந்த தூய்மை பிரச்சாரம், நகரத்தின் கலாச்சார தோற்றத்தைப் பாதுகாப்பது தொடர்பாக நகராட்சியால் வெளியிடப்பட்ட சட்டங்கள் மற்றும் முடிவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வீதிகளில் அல்லது கடை, வணிக நிறுவன வளாகத்திற்கு அருகில் குப்பைகளை போடுவதை தவிர்க்கவும் நகர உறுப்பினர்கள், சமூக உறுப்பினர்கள் மற்றும் கடை உரிமையாளர்களை வலியுறுத்தியுள்ளனர்.

அபுதாபி நகராட்சி, அபுதாபி கழிவு மேலாண்மை மையத்தின் (Abu Dhabi Center for Waste Management – Tadweer) ஒத்துழைப்புடன், கடைகள், வணிக தளங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் ஆகியவற்றில் நகரின் தூய்மையை காக்க தங்கள் ஆய்வுக் குழுக்கள் மூலம் கண்காணிப்பு பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன. இதே போன்று கடந்த ஆண்டும் கடைகள், கட்டுமான தளங்கள், தொழில்துறை மண்டலங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் 236,000 க்கும் மேற்பட்ட ஆய்வு மற்றும் வழிகாட்டுதல்களை ஆய்வு குழுவினர்கள் மேற்கொண்டதாகவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று முசாஃபா நகராட்சி மையமும் நகரின் தோற்றத்தை பாதுகாக்க இரண்டு தகவல் பிரச்சாரங்களை செயல்படுத்தியுள்ளது. அதாவது “சீரற்ற எறிதலிலிருந்து உங்கள் நகரத்தின் தோற்றத்தைப் பாதுகாக்கவும்” (Preserve the appearance of your city from random throwing) மற்றும் “ஒன்றிணைந்து இடையூறுகளைக் குறைப்போம்” (Together to reduce disturbances) எனும் பிரச்சாரத்தின் மூலம் முசாஃபா இன்டஸ்ட்ரியல் சிட்டியில் உள்ள முதலீட்டாளர்கள், உரிமையாளர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களுக்கு நகரின் வெளி தோற்றத்தை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்கவும் சட்டங்களை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை வழங்கி வருகிறது.

மேலும் மஃப்ரக் இன்டஸ்ட்ரியல், அல் நவுஃப் மற்றும் ஹமீம் ஆகிய இடங்களில் தொடர் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருவதும் அத்துடன் நகராட்சி ஆய்வாளர்கள் சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து தொழிலாளர்களுக்கும் எடுத்துரைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!