அமீரக செய்திகள்

UAE: ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு ஒரே ஃப்ளாட்டில் 64 இந்தியர்கள் தங்கிய அவலம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறிய ஏஜென்டுகளை நம்பி அமீரகத்திற்கு வந்த 64 இந்தியர்கள் தற்பொழுது மீட்கப்பட்டுள்ளனர். இந்த 64 பேரும் ஷார்ஜாவில் உள்ள ஒரு பெட்ரூம் அபார்ட்மெண்டில் தங்க வைக்கப்பட்டிருந்தது அனைவரையும் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து விசிட் விசாக்களில் வந்த ஆண்கள் அனைவரும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஏஜெண்ட் குழுவினரால் ஏமாற்றப்பட்டதாகக் கூறியுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ப்ளூ காலர் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்று கூறப்பட்ட பின்னர் ரூ.150,000 (7,500 திர்ஹம்) ஏஜெண்ட்களுக்கு செலுத்தியதாகவும், ஆனால் வேலை வாங்கித் தராமல் அனைவரையும் ஏஜெண்ட்கள் ஏமாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சமூக சேவகர் ஷிராலி ஷேக் முசாஃபர், ஷார்ஜாவின் சாலையோரத்தில் இவர்களில் சிலர் அமர்ந்து அழுது கொண்டிருப்பதைக் கண்டறிந்து அவர்களுடன் பேசி அவர்களின் அவல நிலையைத் தெரிந்து கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “இந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் இந்திய மாநிலங்களான உத்திர பிரதேசம், பீகார் மற்றும் டெல்லியைச் சேர்ந்த திறமையான கார்பென்டர் மற்றும் AC டெக்னீசியன்கள். அமீரகத்தில் தங்களுக்கு சொந்தமான ஒரு நிறுவனம் இருப்பதாகவும், அந்த நிறுவனத்தின் மூலம் பிற நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை வேலை வாங்கிக் கொடுப்பதாகவும் ஏஜெண்ட்கள் தெரிவித்ததாக அவர்கள் கூறினர்” என்று கூறியுள்ளார்.

“இவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கான கனவுக்காக ஏஜெண்ட்களுக்கு தங்கள் வாழ்க்கையில் சேமித்த பணத்தைக் கொடுத்துள்ளனர்” என்று அவர் கூறினார்.

மேலும், “ஐக்கிய அரபு அமீரகத்தில் தரையிறங்கிய உடனேயே அவர்களின் சோதனையானது தொடங்கியிருக்கின்றது. 14 மணி நேரம் கழித்தே அவர்களை அழைத்துச் செல்ல ஏஜெண்ட் ஒரு டிரைவரை அனுப்பியதாக கூறியுள்ளனர்.

அவர்கள் வேனில் அமர்ந்தவுடன், அவர்களது பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு, பின்னர் ஷார்ஜாவில் உள்ள ஒரு பெட்ரூம் பிளாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஒரு முறை மட்டுமே உணவு வழங்கப்பட்டுள்ளது. அந்த உணவும், ஒரு சப்பாத்தி மற்றும் தேநீர் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பின்னர், ஏஜெண்ட் அவர்களுக்கு வேண்டியதை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று  கூறியதாக தொழிலாளர்கள் கூறினர்” என முசாஃபர் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில், அவர்கள் பாஸ்போர்ட்டுகளை ஏஜெண்ட்களிடம் கேட்டபோது, ​​அவர்கள் ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்கள் அடிக்கப்பட்டு, குச்சிகளால் தாக்கப்பட்டுள்ளனர். மேலும், தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களை ஒருபோதும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப மாட்டோம் என்று மிரட்டியுள்ளனர் என்றும் தொழிலாளர்கள் முசாஃபரிடம் தெரிவித்துள்ளனர்.

ஒரே இரவில் தொழிலாளர்களுடன் அமர்ந்து அவர்களின் நிலையைக் கேட்டறிந்த முசாஃபர் அவர்களின் அனைத்து விவரங்களையும் எடுத்துக்கொண்டு, அந்த தொழிலாளர் குழுவிற்கு உணவு பொருட்கள் மற்றும் பிற தேவைகளை ஏற்பாடு செய்துள்ளார்.

முசாஃபர், சமூக சேவகர் ஹிதாயத் அடூர் மற்றும் கர்நாடக NRI தலைவர் மற்றும் தொழிலதிபர் பிரவீன் குமார் ஷெட்டி ஆகியோருடன் சேர்ந்து இவர்களின் நிலை குறித்து இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, தூதரகம் உடனடியாக செயல்பட்டு, தொழிலாளர்களின் ஆவணங்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளது.

தூதரகமானது தொழிலாளர்களை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்து வந்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு இந்த விவகாரத்தை விரைவில் தீர்க்குமாறு உத்தரவிட்டது. அவர்களின் பாஸ்போர்ட்களை திருப்பித் தரவும், இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல விரும்புவோரின் விமான டிக்கெட்டுகள் மற்றும் கொரோனா சோதனைகளுக்கு ஏற்பாடு செய்யவும் கன்சல்டன்சிக்கு தூதரகம் வலுயுறுத்தியுள்ளது.

“இந்தியத் தூதரகத்தின் அறிவுறுத்தலின் படி, நானும் எனது சக சமூக சேவையாளர்களும் ஏஜெண்ட் அலுவலகத்திற்குச் சென்று 64 தொழிலாளர்களின் பாஸ்போர்ட்டுகளையும் சேகரித்து மீண்டும் தொழிலாளர்களிடமே ஒப்படைத்தோம். அவர்களில் பலர் இந்தியாவுக்குத் திரும்ப விரும்பவில்லை என்பதால், அவர்களின் திறமை மற்றும் நிபுணத்துவத்துடன் ஒரு பட்டியலை நாங்கள் அவர்கள் வேலை பெறுவதற்காக தயாரித்துள்ளோம்” என்று முசாஃபர் கூறினார்.

மேலும் கூறுகையில், “64 தொழிலாளர்களில், எட்டு பேருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர்களாக வேலை கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மீதமுள்ளவர்களுக்கு, நாங்கள் இன்னும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!