அமீரக செய்திகள்

துபாய்: தாய்ப்பால் கொடுக்கும் மற்றும் கருத்தரிக்க விரும்பும் பெண்களும் இனி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவித்த DHA..!!

துபாயில் வழங்கப்பட்டுவரும் ஃபைசர்-பயோஎன்டெக் mRNA (Pfizer-BioNTech mRNA) தடுப்பூசியை பெற தகுதியுடையவர்களின் பட்டியலை விரிவுபடுத்துவதன் ஒரு பகுதியாக தற்போது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் குழந்தை பெற கருத்தரிக்க திட்டமிட்டுள்ளவர்கள் ஃபைசர்-பயோஎன்டெக் எம்ஆர்என்ஏ தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்று துபாய் சுகாதார ஆணையம் (DHA) அறிவித்துள்ளது.

மேலும், கோவிட் -19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தடுப்பூசியை பெற மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியதில்லை என்றும் நோய்த்தொற்று லேசானதாகவோ அல்லது அறிகுறியற்றதாகவோ இருந்தால் அவர்களின் தனிமைப்படுத்தல் காலம் முடிந்தவுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றும் DHA கூறியுள்ளது. இதற்கு முன்னதாக கோவிட் -19 தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கான வயது வரம்பை 18 வயதில் இருந்து 16 வயதாக DHA குறைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

DHA வின் மருத்துவ ஆதரவு சேவைகள் மற்றும் நர்சிங் துறையின் தலைமை நிர்வாக அதிகாரியும், கோவிட் -19 தடுப்பூசி வழிநடத்தல் குழுவின் தலைவருமான டாக்டர் ஃபரிதா அல் காஜா இது குறித்து கூறுகையில் சமீபத்திய சர்வதேச ஆய்வுகள் மற்றும் சரியான வழிகாட்டுதல்களின்படி சுகாதார அதிகாரிகள் குழு எடுத்த இந்த முடிவானது சர்வதேச வழிகாட்டுதல்களுடன் ஒத்துப்போகிறது என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, “கோவிட் -19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நோயாளியும் தடுப்பூசி போட தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டும். நோய்த்தொற்று மிதமானதாகவோ அல்லது கடுமையானதாகவோ மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவோ இருந்தால், நோய்த்தொற்றுக்குப் பிறகு தடுப்பூசி போடுவதற்கான கால அளவு நோயாளிக்கு சிகிச்சையளித்த மருத்துவக் குழுவின் முடிவைப் பொறுத்தது. இருப்பினும், அனைத்து அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்த பின்னர் தடுப்பூசியை எடுக்கலாம்”என்று அல் காஜா குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான லத்திபா மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் முனா தஹ்லக் தெரிவிக்கையில், “தாய்ப்பால் கொடுக்கும் அல்லது கருத்தரிக்கத் திட்டமிடும் பெண்களுக்கு mRNA தடுப்பூசி பாதுகாப்பானது என்று மருத்துவ ஆய்வுகள் காட்டுகின்றன. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இப்போது சமீபத்திய DHA தடுப்பூசி வழிகாட்டுதலின் படி mRNA தடுப்பூசி எடுக்கலாம். தடுப்பூசிக்கு முன் அல்லது பின் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை” என்றார். மேலும் கோவிட் -19 தடுப்பூசிகள் நோயை ஏற்படுத்தாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதையும் அவற்றில் நேரடி வைரஸ் இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் தஹ்லக் கூறியுள்ளார்.

துபாய் இந்த வருடம் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அமீரகத்தில் உள்ள தடுப்பூசி பெற தகுதியான வயதுடைய 100 சதவீத மக்களுக்கும் தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டு தடுப்பூசி பிரசாரத்தை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!