உக்ரைன்-ரஷ்யா போர்: ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் மாணவர்களை தாயகத்திற்கு அழைத்து வர தொடங்கியுள்ள இந்தியா..!!

உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே கடந்த வியாழக்கிழமை தொடங்கி 3 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் இருந்து மருத்துவம் படிக்க சென்ற பல நூறு தமிழர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமலும் அந்நாட்டில் பாதுகாப்பு இல்லாமலும் சிக்கித் தவித்து வருகின்றனர்.
அவர்களை மீண்டும் தாயகத்திற்கு அழைத்துச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்திருந்த நிலையில், உக்ரைனில் இருந்து ருமேனியாவுக்கு விரைந்த 219 இந்தியர்களுடன் ஏர் இந்தியா விமானம் சனிக்கிழமை ருமேனியா இருந்து புறப்பட்டு இந்தியாவை வந்தடைந்துள்ளது. இந்த மீட்பு நடவடிக்கைக்கு அரசு ஆபரேஷன் கங்கா என பெயரிட்டு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான ஜெய்ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மேலும் இந்த விமானம் மாலை 6.30 மணிக்கு மும்பையில் தரையிறங்கி உள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ட்வீட் செய்ததாவது, “219 இந்தியர்கள் ருமேனியாவில் இருந்து புறப்பட்டுள்ளனர். எங்கள் அணியினர் 24 மணி நேரமும் களத்தில் பணியாற்றி வருகின்றனர். நானும் தனிப்பட்ட முறையில் நிலைமையை கண்காணித்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஏர் இந்தியாவின் இரண்டாவது விமானம் சனிக்கிழமை நண்பகலுக்கு முன்னதாக டெல்லியில் இருந்து ருமேனியாவிற்கு மாணவர்களை அழைத்து வர சென்றுள்ளது.
மேலும் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தனது குழுக்களை ஹங்கேரிய எல்லை மற்றும் ருமேனியா எல்லை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் சோதனைச் சாவடிகளில் நிறுத்தியுள்ளது. இருப்பினும் முன்னறிவிப்பின்றி எல்லை சோதனைச் சாவடிகளை அடையும் இந்தியர்களுக்கு உதவுவது கடினமாகி வருவதாகவும் தூதரகம் கூறியுள்ளது.
“உக்ரைனின் மேற்கு நகரங்களில் தண்ணீர், உணவு, தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகளுடன் தங்குவது ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது மற்றும் நிலைமையை முழுமையாக அறிந்து கொள்ளாமல் எல்லை சோதனைச் சாவடிகளை வந்தடைய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இதே போல் பல நூறு தமிழக மாணவர்களும் உக்ரைனில் பதுங்கு குழிகள், மெட்ரோ நிலையங்கள், வீடுகள் போன்றவற்றில் தங்கியிருப்பதாக உக்ரைனில் இருந்து தப்பித்து வந்த தமிழக மாணவர்கள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.