UAE: மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சரை பார்வையிட டிக்கெட் முன்பதிவு துவக்கம்…!! பெறுவது எப்படி…??
துபாயின் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உலகின் மிக அழகிய அருங்காட்சியகங்களில் ஒன்றான ‘மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர்’ இந்த மாத இறுதியில் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என துபாய் ஆட்சியாளர் சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மிகவும் அழகான தோற்றத்தில் நேர்த்தியான வடிவமைப்பில் கட்டப்பட்டு தற்போது திறப்புக்கு தயாராகியுள்ள இந்த மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர் அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்கான நுழைவு டிக்கெட்டுகள் விற்பனை ஆன்லைனில் தொடங்கியிருப்பதாகவும், பொதுமக்கள் வாங்கிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட பார்வையாளர்கள் அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.motf.ae ல் டிக்கெட்டுகளை வாங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான நுழைவு இலவசம் என்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இந்த அருங்காட்சியகத்தை பார்வையிடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே போல் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் ஒரு பராமரிப்பாளர் ஆகியோருக்கும் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அருங்காட்சியகம் திறக்கும் நேரத்தில் ஒவ்வொரு டிக்கெட் வைத்திருப்பவருக்கும் ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளி ஒதுக்கப்படும் என்பதால், பார்வையாளர்கள் அருங்காட்சியகத்திற்கு வரும் நேரத்திற்கு முன்னதாகவே டிக்கெட்டிற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று அமீரக அரசாங்கத்தின் ஆன்லைன் ஊடக அலுவலகம் (GMO) செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகம் வாரம் முழுவதும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். தரையில் இருந்து 77 மீட்டர் உயரம் உயர்ந்திருக்கும் இந்த கட்டிடம், 1,024 தனித்துவமான துருப்பிடிக்காத எஃகு கலவை பேனல்களை உள்ளடக்கியது. இதில் அரபு மொழியில் துபாய் ஆட்சியாளர் எழுதிய கவிதையில் இருந்து மூன்று குறிப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.