UAE: மலை உச்சியில் ஒரு ரோலர் கோஸ்டர் பயணம்… த்ரில்லான அனுபவத்திற்கு நீங்கள் தயாரா…??
உலகளவில் பார்வையாளர்களை கவர்ந்திழுப்பதில் அமீரகத்திற்கு எப்போதுமே தனியிடம்தான். பல்வேறு புதுவிதமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், பொழுதுபோக்கு இடங்கள், சாகசங்கள் போன்ற பலவற்றிற்கு பெயர் போனது அமீரகம்.
அதில் தற்பொழுது சாகசத்தை விரும்பும் நபர்களுக்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்டு திறக்கப்படவிருக்கின்றது ராஸ் அல் கைமாவில் உள்ள Jais Sledder. நாளை, பிப்ரவரி 16 முதல் திறக்கப்படும் அமீரகத்தின் உயரமான மலையான ஜபெல் ஜெய்ஸில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஜெய்ஸ் ஸ்லெடர் 40 கிமீ வேகத்தில் பயணிக்கக்கூடியது.
1,885-மீட்டருக்கு மலையில் செல்லும் ரோலர் கோஸ்டர் போன்ற இந்த சாகசப்பயணமானது, ஹஜர் மலைத்தொடர் வழியாகச் செல்லும். இது பயணிகளுக்கு அவர்கள் செல்லும் போது பரந்தளவிலான காட்சிகளை வழங்குகிறது.
இருப்பினும் ஒவ்வொரு பயணியும் பாதுகாப்பாக பயணிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பயணிகள் அவர்களாகவே பிரேக்கிங் சிஸ்டத்தை அணுகலாம், இதனால் அவர்கள் தங்கள் வேகத்தை கட்டுப்படுத்த முடியும்.
இந்த சாகசப் பயணம் தொடங்கும் பகுதிக்கு அருகில் அல்லது ஜெய்ஸ் அட்வென்ச்சர் சென்டரில் இதற்கான டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. ஒற்றை மற்றும் பல-பயண டிக்கெட்டுகள் என்ற முறையில் இந்த டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.
செயல்படும் நேரம்
செவ்வாய் முதல் ஞாயிறு வரை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை இது திறந்திருக்கும்.
ஒரு நபருக்கு 40 திர்ஹமும், ஒரு நபர் மற்றும் குழந்தைக்கான பயணத்திற்கு 60 திர்ஹமும் டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் இதற்கு முன் கூட்டியே பதிவு செய்ய அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
இதில் பயணிக்க சிறுவர்களுக்கு குறைந்தது மூன்று வயதாகி இருக்க வேண்டும். எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் (அல்லது 1.35 மீ உயரத்திற்கு குறைவானவர்கள்) பெரிய நபருடன் இரண்டு இருக்கைகள் கொண்ட ஸ்லெட்டில் சவாரி செய்ய வேண்டும். எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தனியாக சவாரி செய்ய குறைந்தபட்சம் 1.35 மீ உயரம் இருக்க வேண்டும். ஒரு ஸ்லெட்டின் அதிகபட்ச எடை 150 கிலோ ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.