அமீரக சட்டங்கள்

அமீரகத்தின் புதிய தொழிலாளர் சட்டத்தால் தொழிலாளிக்கு கிடைக்கும் பலன்கள் என்ன..?? சிறுபார்வை…!!

ஐக்கிய அரபு அமீரக அரசால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட புதிய தொழிலாளர் சட்டமானது (UAE Labour Law), பிப்ரவரி 02 ம் தேதி முதல் அமீரகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. தனியார் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் உரிமையை ஆதரிக்கும் விதமாக பழைய தொழிலாளர் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்கள், நெகிழ்வான வேலை, தற்காலிகமான மற்றும் பகிரப்பட்ட வேலைகள் போன்ற மாற்றங்களும் இந்த புதிய சட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பெரும்பாலான தனியார் துறை ஊழியர்களுக்கான குறுகிய கால, நிலையான கால வேலை ஒப்பந்தங்கள், வேலையை விட்டு வெளியேறிய பிறகு அவர் 180 நாட்களுக்கு நாட்டில் தங்குவதற்கான திறன், மகப்பேறு விடுப்பு, நிலுவை ஊதியம், ஓவர்டைம் போன்றவற்றில் பல்வேறு மாற்றங்களை இந்த புதிய சட்டத்தின் கீழ் தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. அது பற்றிய ஒரு முழு தொகுப்பையும் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

>> பகிரப்பட்ட வேலைகள் (shared jobs) உட்பட நெகிழ்வான வேலை (flexible jobs) விருப்பங்களில், முதலாளியின் ஒப்புதலுக்கு பிறகு ஒரு வேலைக்கான மணிநேரங்களை இரண்டு பேர் சமமாக பிரித்துக் கொண்டு அந்த வேலையை செய்து முடிக்கலாம்.

>> குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வேலை நேரம் அல்லது குறிப்பிட்ட நாட்களுக்கு தொழிலாளர்கள் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட முதலாளிகள் அல்லது நிறுவனங்களுக்கு வேலை செய்யலாம்.

>> ஒரு குறிப்பிட்ட பணியை முடிக்க தொழிலாளர்கள் ஒரு தற்காலிக காலத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்யலாம்.

>> பணிச்சுமை மற்றும் முதலாளியின் தேவைகளைப் பொறுத்து தொழிலாளர்களின் வேலை நேரம் அல்லது வேலை நாட்களை முதலாளிகள் மாற்றலாம். தொழிலாளர்கள் வேலை செய்யும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும் முதலாளிகள் அனுமதிக்கலாம்.

>> புதிய வேலையில் ஒரு தொழிலாளரை பணியமர்த்த போடப்படும் வேலை ஒப்பந்தங்கள் இப்போது வரையறுக்கப்பட்டதாக (Limited Contract) இருக்க வேண்டும். அதாவது, காலவரையற்ற (Unlimited) அல்லது நிரந்தர ஒப்பந்தங்களில் உள்ளவர்கள், மூன்று ஆண்டுகள் வரையிலான நிலையான கால ஒப்பந்தங்களுக்கு மாற்றப்படுவார்கள்.

>> ஒருவரின் வேலை திறமையை கண்டறியும் காலம் எனப்படும் பிராபேஷன் காலங்கள் (Probation period) ஆறு மாதங்களுக்கு மேல் இருக்கக்கூடாது. இந்த காலத்தில் ஒரு தொழிலாளியை வேலையை விட்டு நிறுத்துவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டும்.

>> அதேபோன்று பிராபேஷன் காலத்தின் போது வேலையை மாற்ற விரும்பும் தொழிலாளர்கள் ஒரு மாதத்திற்கு முன்னர் அறிவிப்பு (Notice period) கொடுக்க வேண்டும். அதுவே நாட்டை விட்டு வெளியேற விரும்பினால் 14 நாட்களுக்கு முன்னர் முதலாளிக்கு அறிவிப்பு கொடுக்க வேண்டும்.

>> ஒரு தொழிலாளி நாட்டை விட்டு வெளியேறி மூன்று மாதங்களுக்குள் புதிய வேலைக்குத் திரும்பினால், அவரின் புதிய முதலாளி விசா செலவுகள் மற்றும் தொழிலாளர் செலவுகளை முன்னாள் முதலாளிக்கு செலுத்த வேண்டும்.

>> தொழிலாளர்கள் வேலையை விட்டு வெளியேறிய பிறகு அல்லது அவர்களின் வேலை நிறுத்தப்பட்ட பிறகு, அவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு முதலாளிகள் கட்டாயப்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக அந்த தொழிலாளி அமீரகத்தில் தங்கி வேலை தேட 180 நாட்கள் வரை அனுமதிக்கப்படுவார். முந்தைய சட்டத்தின்படி, தங்களுடைய குடியிருப்பு விசாவை ரத்து செய்த ஒருவர், புதிய வேலையைத் தேடுவதற்கு அல்லது நாட்டை விட்டு வெளியேற 30 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தது.

>> தனியார் துறை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும். இது குறித்த கூடுதல் விபரங்கள் வரக்கூடிய நாட்களில் அறிவிக்கப்படும்.

>> ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் கூடுதல் நேரம் வேலை செய்யுமாறு பணியாளர்களை கட்டாயப்படுத்த முடியாது. மேலும் அவர்களின் வேலைக்கு அது தேவைப்பட்டால், அவர்கள் வழக்கமான மணிநேர கட்டணத்தை விட 25 சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டும்.

>> பாஸ்போர்ட் போன்ற ஊழியர்களின் முக்கியமான ஆவணங்களை முதலாளிகள் தொழிலார்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும். தொழிலாளர் ஆட்சேர்ப்பு கட்டணத்தை (Recruitment fees) தொழிலாளர்களிடம் முதலாளிகள் வசூலிக்க முடியாது.

>> 100,000 திர்ஹம்ஸிற்கும் குறைவான இழப்பீட்டிற்காக முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர் வழக்குகளை தாக்கல் செய்யும் போது ஊழியர்கள் சட்டக் கட்டணம்  செலுத்த வேண்டியதில்லை. அதுவே 100,000 திர்ஹம்ஸிற்கும் மேல் தொகை இருந்தால், சட்டப்பூர்வ கட்டணம் செலுத்த வேண்டும்.

>> வேலை ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டபடி, சேவையின் முடிவில் வழங்கப்படும் சேவை ஊதியம் (End of Benefits) இப்போது அமீரகத்தின் திர்ஹம்ஸ் அல்லது பணியாளரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நாணயத்தில் எடுத்துக்காட்டாக இந்திய ரூபாயில் செலுத்தலாம்.

>> சேவையின் முடிவில் வழங்கப்படும் சேவை ஊதியம் போன்ற தொழிலாளர்களின் அனைத்து சேவை உரிமைகளும் 14 நாட்களுக்குள் முதலாளிகளால் செலுத்தப்பட வேண்டும்.

>> வேலையை விட்டு செல்லும் தொழிலாளர்களுக்கு அவர்களின் முதலாளியால் வழங்கப்படும் தங்குமிடத்தை விட்டு வெளியேற ஒப்பந்தத்தின் முடிவில் இருந்து ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

>> பணியமர்த்தப்பட்ட தொழிலாளி தனது பதவியை பயன்படுத்தி தனிப்பட்ட பலன்களைப் பெற்றால் அல்லது முதலாளியின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற 10 குறிப்பிட்ட காரணங்களுக்காக முன் அறிவிப்பு (Notice Period) இல்லாமல் பணிநீக்கம் செய்யப்படலாம். அதேபோன்று தொழிலாளர்களும் குறிப்பிட்ட காரணங்களின் கீழ் நோட்டீஸ் பீரியட் இல்லாமல் வேலையை விட்டு செல்லலாம்.

>> முதலாளி மற்றும் தொழிலாளி இருவருக்குமான ஒப்பந்தத்தை பொறுத்து, தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் வாரத்தில் ஒரு கட்டாய ஓய்வு நாள் இருக்க வேண்டும்.

>> ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடைவெளிகள் இல்லாமல் தொடர்ச்சியாக ஐந்து மணிநேரங்களுக்கு மேல் தொழிலாளி வேலை செய்யக்கூடாது. இந்த இடைவேளையானது ஒரு மணிநேரத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும், மேலும் இந்த இடைவேளைகள் வேலை நேரத்தின் ஒரு பகுதியாக கணக்கிடப்படக்கூடாது.

>> பணியமர்த்தப்பட்ட தொழிலாளிக்கு மரணம் ஏற்பட்டால், அவருக்கு வழங்க வேண்டிய சேவை ஊதியம் உள்ளிட்ட அனைத்தையும் அவரது குடும்பத்தினருக்கு முதலாளிகள் செலுத்த வேண்டும். மேலும் அவர்களின் உடலை சொந்த நாட்டிற்கு அனுப்ப ஆகும் செலவை முதலாளி ஏற்க வேண்டும்.

>> தொழிலாளியின் குடும்பத்தில் மரணம் ஏற்பட்டால் அவரின் உறவை பொறுத்து மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் ஊதியத்துடன் கூடிய துக்க விடுப்பு பெற அனுமதிக்கப்படும். அதில் மனைவி இறந்தால் ஐந்து நாட்களுக்கும், நெருங்கிய குடும்ப உறுப்பினர் இறந்தால் மூன்று நாட்களுக்கும் தொழிலாளர்கள் துக்க விடுமுறையை கேட்கலாம்.

>> பணியில் இருக்கும் தொழிலாளிக்கு குழந்தை பிறந்தால் ஐந்து நாட்கள் ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பை ஆறு மாதங்களுக்குள் எடுத்து கொள்ளலாம். அதே போன்று பணியில் இருக்கும் தாய்மார்களுக்கு 45 நாட்கள் முழு ஊதியம் மற்றும் 15 நாட்கள் பாதி ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்.

>> ஒரு முன்னாள் ஊழியர் அவர் பணிபுரிந்த முதலாளிக்கு எதிராக போட்டியிடுவதையோ அல்லது அதே துறையில் போட்டியிடும் திட்டத்தில் பங்கேற்பதையோ தடுக்க முதலாளியை புதிய சட்டம் அனுமதிக்கிறது.

>> 15 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள சிறுவர்கள் தங்கள் பெற்றோரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் மற்றும் மருத்துவ உடற்பயிற்சி அறிக்கையைப் பெற்ற பிறகு இப்போது வேலை செய்யலாம். இருப்பினும், ஆபத்தான வேலைகளைச் செய்யவோ அல்லது இரவு 7 மணிக்குப் பிறகு வேலை செய்யவோ அவர்களை நியமிக்கக் கூடாது. அவர்கள் ஒரு மணி நேர இடைவேளை உட்பட, ஒவ்வொரு நாளும் ஆறு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது.

Related Articles

Back to top button
error: Content is protected !!