இந்திய செய்திகள்

சர்வதேச விமான போக்குவரத்திற்கான கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா…!!

இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் பரவலைத் தொடர்ந்து இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு திட்டமிடப்பட்ட சர்வதேச விமான சேவைகள் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தொடங்கவிருக்கின்றது. இதற்கான புதுப்பிக்க வழிகாட்டுதல்களை இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

அதில் தற்போதுள்ள கொரோனா தொடர்பான பல கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது. அதன்படி கேபின் குழு உறுப்பினர்கள் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணக் கருவிகளை அணியத் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. 

மேலும் மருத்துவ அவசரநிலைகளுக்காக சர்வதேச விமானங்களில் மூன்று இருக்கைகளை விமான நிறுவனங்கள் காலியாக வைத்திருக்க தேவையில்லை என்றும் நாட்டில் அதிகளவு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாலும் கொரோனா நோய்த்தொற்றுகள் தொடர்ந்து குறைந்து வருவதாலும் இந்த விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன என்று அரசாங்கம் கூறியுள்ளது.

ஆனால் பாதுகாப்பு முக கவசங்களை அணிவது மற்றும் சானிடைசர்களை பராமரிப்பது விமான நிலையங்களிலும் விமானங்களிலும் கட்டாயம் என அந்த வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுவாச பிரச்சனை கொண்ட சில பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கென, விமான நிறுவனங்கள் சில கூடுதல் PPE பாதுகாப்பு கியர்கள், சானிடைசர்கள் மற்றும் N -95 முக கவசங்களை எடுத்துச் செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா நெருக்கடியைத் தொடர்ந்து மார்ச் 23, 2020 அன்று திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமான சேவைகளை இந்தியா இடைநிறுத்தம் செய்திருந்தது. பின்னர் ஜூலை 2020 முதல் 45 நாடுகளுடன் ஏர் பபுள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு சிறப்பு விமான சேவைகளை இயக்கிக்கொண்டு இருக்கின்றது.

Related Articles

Back to top button
error: Content is protected !!