அமீரக செய்திகள்

UAE: நூடுல் கட்டரில் தவறுதலாக கை விரல்களை வெட்டிக்கொண்ட தமிழர்.. அறுவை சிகிச்சையில் வெற்றிகரமாக இணைத்த தமிழ் மருத்துவர்..!!

துபாயின் அல் நஹ்தா பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 வயதான சுதர்சன் சுப்ரமணியன் என்ற சமையல்காரர் ஒருவர், நூடுல் கட்டரை சுத்தம் செய்யும் போது அதில் பொருத்தப்பட்டிருந்த பிளேடு பட்டு எதிர்பாராதவிதமாக தனது வலது கையில் இரண்டு விரல்களை வெட்டிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

ஐந்து மாதங்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்த சுப்ரமணியன், சம்பவம் நடந்த அன்று வழக்கம் போல் தனது பணியை துவங்கியுள்ளார். பணியை துவங்கிய சில மணி நேரங்களில் திடீரென்று தவறுதலாக அவரின் வலது கை விரல்கள் நூடுல் கட்டர் பிளேடில் பட்டு இரு துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளது. இதனை அறிந்த சக ஊழியர்கள் கை விரல்கள் வெட்டப்பட்ட 30 நிமிடங்களுக்குள் அவரை அல் குசைஸில் உள்ள ஆஸ்டர் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.

உடனடியாக அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட 12 மணி நேர சிக்கலான நீண்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் அவரின் துண்டிக்கப்பட்ட கை விரல்கள் இணைக்கப்பட்டு, தற்போது அவர் நலமுடன் இருப்பதாக சுப்ரமணியனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான டாக்டர் ராஜ்குமார் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டாக்டர் ராஜ்குமார் விவரிக்கையில், சுப்ரமணியனின் ஆள்காட்டி விரல் நடுவில் இருந்து வெட்டப்பட்டதாகவும், அதே நேரத்தில் அவரது நடுவிரல் நுனியில் இருந்து வெட்டப்பட்டதாகவும், இதனால் அறுவை சிகிச்சை செயல்முறை மிகவும் சிக்கலாக இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் நுனியில் இருந்து வெட்டு விழுந்தால், விரலில் உள்ள தமனிகள் மற்றும் நரம்புகளை இணைப்பது கடினம் என்றும், ஆனால் நாங்கள் அதை வெற்றிகரமாக செய்தோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கை விரல்கள் வெட்டப்பட்ட சுப்ரமணியன் கூறுகையில், “அது திடீரென்று நடந்தது, அந்த இடம் முழுவதும் இரத்தம் தெறித்தது, இரத்தம் வழிந்தாலும் கைவிரல்கள் வெட்டப்பட்டதை நான் உணரவில்லை, இது ஒரு ஆழமான வெட்டு என்று தான் நான் நினைத்தேன், பின்னர் தான் என் விரல்கள் அங்கு இல்லை என்பதை நான் உணர்ந்தேன், இது மிகவும் அதிர்ச்சியாகவும் பயங்கரமாகவும் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், காயம் ஆறுவதற்கும், விரல்கள் சரியாகவும் இயல்பாகவும் மாறுவதற்கும் 8 முதல் 10 வாரங்கள் ஆகும் என்று மருத்துவர் கூறியதாகவும் சுப்ரமணியன் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!