அமீரக அதிபரின் மறைவிற்கு இந்தியா இரங்கல்.. ஒரு நாள் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு..!!

அமீரகத்தின் ஜனாதிபதியும், அபுதாபியின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சையத் அல் நஹ்யான் அவர்களின் மறைவைத் தொடர்ந்து, மே 14 ம் தேதி சனிக்கிழமையன்று இந்தியா முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.
மாண்புமிகு ஷேக் கலீஃபா அவர்களின் மறைவிற்குப் பின் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின்படி, மறைந்த அமீரக ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில், மே 14 ஆம் தேதி நாடு முழுவதும் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் இந்தியா முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், அரசு தொடர்பான பொழுதுபோக்கு நிகழ்வுகளை ரத்து செய்யுமாறும் இந்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை ஐக்கிய அரபு அமீரகம் என்பது இந்தியாவின் நட்பு நாடுகளில் மிகவும் நெருங்கிய ஒரு நாடு என்பதும், அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவை சேர்ந்தவர்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளும் அமீரக அதிபரின் மறைவிற்கு மூன்று நாட்கள் துக்க அனுசரிப்பை அறிவித்துள்ளது. அமீரகத்தை பொறுத்தவரை நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூன்று நாட்கள் மூடப்படும் எனவும், அமீரகம் முழுவதும் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அமீரக அரசு அறிவித்துள்ளது.