அமீரக சட்டங்கள்

துபாய்: உங்கள் மனைவிக்கு விசா ஸ்பான்சர் செய்வது எப்படி..? செலவு எவ்வளவு ஆகும்..? தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தும் உள்ளே..!!

துபாயில் பணிபுரிய கூடிய வெளிநாட்டவர்கள் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் ஸ்பான்சர் செய்து, அவர்களையும் ரெசிடென்சி விசாவில் அமீரகத்திற்கு அழைத்து வர முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். இருப்பினும், புதிதாக துபாய்க்கு வந்தவர்கள் அது பற்றிய தகவல்களை முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அவ்வாறு, துபாய்க்கு புதிதாக வந்து பணிபுரிய கூடியவர்கள் தங்களின் மனைவியையும் ரெசிடென்சி விசாவில் அமீரகம் அழைத்து வர ஸ்பான்சர் செய்வது எப்படி..? அதற்கான செலவு எவ்வளவு ஆகும்..? விசா பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..? என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் இங்கே காண்போம்.

ஸ்பான்சர் செய்ய தேவையான ஆவணங்கள் என்னென்ன..??

துபாயின் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA), துபாயில் பணிபுரியும் ஒருவர் தனது மனைவியின் நுழைவு அனுமதி அல்லது குடியிருப்பு விசாவிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் பின்வரும் பட்டியலை வழங்கியுள்ளது:

  • வெள்ளை நிற பின்னணியுடன் மனைவியின் சமீபத்திய போட்டோ
  • ஸ்பான்சர் செய்யும் கணவரின் பாஸ்போர்ட் மற்றும் அவரது குடியிருப்பு விசாவின் நகல்
  • மனைவியின் பாஸ்போர்ட்டின் நகல் (பாஸ்போர்ட்டின் செல்லுபடி காலம் ஆறு மாதங்களுக்கு மேல் இருக்க வேண்டும்)
  • ஸ்பான்சர் செய்யும் கணவரின் சம்பளச் சான்றிதழ் (Salary Certificate) மற்றும் பணி ஒப்பந்தம் (மாத வருமானம் 4,000 திர்ஹம்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்).
  • அமீரகத்தில் தங்க போகும் வாடகை வீட்டின் குத்தகை ஒப்பந்தம் (Tenancy Contract).
  • கணவன், மனைவிக்கான சான்றளிக்கப்பட்ட திருமண ஒப்பந்தம் (Attested Marriage Certificate).

(குறிப்பு: உங்கள் திருமணச் சான்றிதழை இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்தியாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் (MOFAIC) ஆகியவற்றால் சான்றளிக்கப்படுவதை நீங்கள் முதலில் உறுதிப்படுத்த வேண்டும்)

விசாவிற்கு விண்ணப்பிப்பது எப்படி..?

GDRFA பட்டியலிட்டுள்ளபடி, மேலே கூறப்பட்ட அனைத்து ஆவணங்களும் உங்களிடம் இருந்தால், நீங்கள் உங்களின் மனைவியை அமீரகம் அழைத்து வருவதற்கான குடியிருப்பு விசாவிற்கு, கீழ்காணும் முறையின் மூலம் விண்ணப்பிக்கலாம்:

1. GDRFA வின் அமர் மையத்திற்கு (Amer Center) சென்று நேரடியாக உங்களின் ஆவணங்களை சமர்ப்பித்து விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்.

2. அமீரகத்தில் பதிவு செய்யப்பட்ட டைப்பிங் சென்டர் சென்று அங்கே உங்களின் ஆவணங்களை சமர்ப்பித்தும் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்.

3. அல்லது, DubaiNow என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனிலும் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்.

விசா விண்ணப்ப செயல்முறை

1. ஸ்பான்சர் கோப்பைத் (Sponsor file) திறக்கவும். (நீங்கள் முதலில் ஒரு ஸ்பான்சராக உங்கள் விவரங்களை வழங்க வேண்டும், அதனால் ஒரு கோப்பை GDRFA குடியேற்ற அமைப்பில் திறக்க முடியும். இது ‘ஸ்பான்சர் கோப்பு’ என்று குறிப்பிடப்படுகிறது)

2. நுழைவு அனுமதிக்கு (Entry Permit) விண்ணப்பிக்கவும். (உங்கள் மனைவிக்கான நுழைவு அனுமதிக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். அந்த நுழைவு அனுமதியைப் பயன்படுத்தி, விசா விண்ணப்ப செயல்முறையை முடிக்க உங்கள் மனைவி அமீரகத்திற்கு வர முடியும்)

3. மனைவி அமீரகத்தில் விசிட் விசாவில் இருந்தால் ‘நிலை மாற்றம் (Status Change)’ செய்ய விண்ணப்பிக்கவும். (உங்கள் மனைவி ஏற்கனவே விசிட் விசாவில் வந்து அமீரகத்தில் இருந்தால், நீங்கள் முதலில் நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும், பின்னர் ‘நிலை மாற்றம்’ செயல்முறைக்கு விண்ணப்பிக்க வேண்டும்)

மருத்துவ உடற்தகுதி சோதனை(Medical Fitness Certificate) :

உங்களின் மனைவி அமீரகத்திற்கு நுழைவு அனுமதி விசாவில் வந்ததும், குடியிருப்பு விசாவிற்கான விண்ணப்ப செயல்முறையை முடிக்க முதலில் துபாய் ஹெல்த் அத்தாரிட்டி (DHA) மருத்துவ உடற்தகுதி மையத்திற்கு சென்று மருத்துவ உடற்தகுதி பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

எமிரேட்ஸ் ஐடி (Emirates ID):

அடுத்த கட்டமாக உங்கள் மனைவியின் எமிரேட்ஸ் ஐடிக்கு விண்ணப்பிக்க வேண்டும், இதற்காக உங்கள் மனைவியின் கைரேகை பயோமெட்ரிக்கை வழங்க, அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஃபெடரல் ஆணையத்தின் (ICP) மையத்திற்குச் செல்ல வேண்டும்.

சுகாதார காப்பீடு (Health Insurance):

துபாயில் ரெசிடென்சி விசா பெறுபவர்கள் குறைந்தபட்சம் ஒரு அடிப்படை சுகாதார காப்பீட்டைப் பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். அதற்கு ஹெல்த் இன்சூரன்ஸ் ஏஜென்ட்ஸ் மூலம் ஆன்லைனில் நீங்கள் உடல்நலக் காப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். அல்லது டைப்பிங் சென்டர் மூலமும் விண்ணப்பிக்கலாம். உங்கள் பட்ஜெட் மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பொறுத்து அடிப்படைத் திட்டம், விரிவான திட்டம் அல்லது மேம்படுத்தப்பட்ட நன்மைகள் திட்டம் ஆகியவற்றிலிருந்து ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.

பாஸ்போர்ட்டில் விசா ஸ்டாம்பிங்:

குடியிருப்பு விசா பெரும் செயல்முறையின் கடைசி கட்டம் குடியிருப்பு விசாவை உங்கள் மனைவியின் பாஸ்ப்போர்ட்டில் ஸ்டாம்பிங் செய்வதாகும். சமீபத்தில் பாஸ்ப்போர்ட்டில் விசா ஸ்டாம்பிங் செய்யப்படாது எனவும், அதற்கு பதிலாக இனிமேல் எமிரேட்ஸ் ஐடியே முதன்மை இருப்பிட ஆதாரமாக கருதப்படும் என்றும் அமீரகத்தின் அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஃபெடரல் ஆணையம் (ICP) அறிவித்தது. இருப்பினும் துபாய் விசா பெறுபவர்கள் தங்களின் பாஸ்ப்போர்ட்டில் விசா ஸ்டாம்பிங் பெறுவார்கள் என GDRFA ஆல் முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ரெசிடென்சி விசா பெற எவ்வளவு செலவாகும்..?

உங்கள் மனைவிக்கு ரெசிடென்சி விசா பெற விண்ணப்பிக்க தொடங்குவதிலிருந்து இறுதி வரை ஒவ்வொரு கட்டத்திலும் நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களின் முழு விபரமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

– கோப்பு திறப்பு கட்டணம் – 269 திர்ஹம்ஸ்

– நுழைவு அனுமதி – 500 திர்ஹம்ஸ் (மனைவி அமீரகத்திற்கு வெளியே இருந்தால்) அல்லது 1,180 திர்ஹம்ஸ் (மனைவி அமீரகத்தில் இருந்தால் நிலை மாற்றத்திற்கான கட்டணம் 675 திர்ஹம்ஸ் உட்பட)

– மருத்துவ உடற்தகுதி சோதனை – 320 திர்ஹம்ஸ்

– எமிரேட்ஸ் ஐடி – 1 வருடத்திற்கு 170 திர்ஹம்ஸ், இரண்டு வருடத்திற்கு 270 திர்ஹம்ஸ், மூன்று வருடத்திற்கு 370 திர்ஹம்ஸ்

– விசா ஸ்டாம்பிங் – 500 திர்ஹம்ஸ்

– ஹெல்த் இன்சூரன்ஸ் – நீங்கள் விண்ணப்பிக்கும் கவரேஜ் மற்றும் நன்மைகளைப் பொறுத்து அதற்கான செலவு வேறுபடும்.

– நீங்கள் டைப்பிங் சென்டர் மூலம் விசாவிற்கு விண்ணப்பித்திருந்தால், அவர்களின் சேவைக் கட்டணங்களையும் நீங்கள் செலுத்த வேண்டும். டைப்பிங் சென்டரை பொறுத்து அதற்கான கட்டணமும் மாறுபடும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!