அமீரக சட்டங்கள்

UAE: வாட்ஸ்அப், பேஸ்புக்கில் அச்சுறுத்தல், மோசடிக்கு எதிராக நீதிமன்ற ஆதாரங்களை சேகரிப்பது எப்படி..?? தெரிந்து கொள்வோம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளங்களை பயன்படுத்தி, குற்றவாளிகள் மற்றவர்களை அச்சுறுத்துவது அல்லது மோசடி செய்வது போன்ற சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு நம்மை குறிவைத்து மோசடி செய்யும் நபருக்கு எதிராகவோ, அல்லது நம்மை தனிப்பட்ட முறையில் அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகவோ, நீதிமன்ற ஆதாரங்களை எவ்வாறு சேகரிப்பது என்பது குறித்து நாம் இங்கே தெரிந்து கொள்வோம்.

வாட்ஸ்அப்

அமீரகத்தில் வசிக்கும் ஒரு நபர் வேறு நபருக்கு அச்சுறுத்தல் விடுப்பது அல்லது மோசடி செயலில் ஈடுபடுவது போன்ற குற்ற செயல்களை வாட்ஸ்அப் செயலி மூலமாகவும் செய்ய முடியும். அவ்வாறு ஒருவர் பாதிக்கப்பட்டால், அதற்கு ஆதாரமாக வாட்ஸ்அப்பில் நடக்கும் உரையாடல்களை நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கலாம் என்று சைபர் கிரைம் துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான உரையாடலில் மோசடி செய்ய முற்படும் நபருக்கு எதிராக ஈமோஜிகள்/எமோடிகான்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க சட்ட ஆலோசகர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் குறிப்பாக அதனை ஆதாரமாகப் பயன்படுத்தினால், அவை எதைக் குறிக்கின்றன என்பதை முழுவதுமாக வெளிப்படுத்தாது எனவும் கூறியுள்ளனர்.

உதாரணமாக, உங்களிடம் ‘நீங்கள் தயாரா?’ என்று ஒருவர் கேள்வி கேட்டால் அதற்கு, ‘பொருட்களை வழங்கத் தயாராக இருக்கிறேன்’ என்பது போன்று தெளிவாக அதன் நோக்கத்தை விரிவாக கூறும் வகையில் பதிலளிக்க வேண்டும் எனவும், கட்டைவிரலை தூக்கி காட்டுவது போன்ற ஈமோஜிகளை மட்டும் அனுப்பாதீர்கள் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் ஆதாரத்தில் புனைப்பெயர்கள் அல்லது பெயரின் சுருக்கங்கள் கொண்டதாக இல்லாமல், வழக்கு போடப்படும் நபரின் முழுப் பெயரையும் அவர்களின் தொடர்புப் பெயராகப் (contact name) பயன்படுத்த வேண்டும் என்றும், புகார்தாரர் தங்கள் மொபைலில் அந்த நபரின் தொடர்புப் பெயரை வேறு ஏதாவது வைத்துக் கொள்ள விரும்பினால், நீதிமன்றத்திற்கு ஆதாரமாக அனுப்பும் முன் தொடர்புப் பெயரை மொபைல் போனில் மாற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோன்று உரையாடலில் குரல் குறிப்புகளை (voice note) அனுப்புவதற்குப் பதிலாக குறுஞ்செய்திகளைப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். எனினும், உரையாடல் ஒரு மின்னணு பதிவாகச் சேமிக்கப்பட வேண்டும், மேலும் அது உருவாக்கப்பட்ட, அனுப்பப்பட்ட அல்லது சட்டப்பூர்வ ஆதாரமாகப் பயன்படுத்தப்படும் வடிவத்தில் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பேஸ்புக் மற்றும் ட்விட்டர்

பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்களில் குற்றத்தில் ஈடுபடும் நபர்களின் அடையாளத்தை கண்டறிவது கடினம் என்பதால், இது வழக்கு விசாரணைக்கு இடையூறாக அமையலாம். குற்ற வழக்கு பதியப்படும் சமூக ஊடக கணக்கு உரிமையாளரின் அடையாளத்தை கண்டறிவதற்கு, சமூக ஊடக தளத்தின் அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டிய தேவை இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

அதுவே குற்ற செயலில் ஈடுபட்ட நபரின் சமூக ஊடக கணக்கு நாட்டிற்கு வெளியில் இருக்குமானால், வழக்கு விசாரணையில் நிச்சயமாக அதிக சிரமம் உள்ளது என்றும், குடியிருப்பாளர்கள் சமூக ஊடக தளங்களை பயன்படுத்தும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!