அமீரக செய்திகள்

அமீரகத்தில் இருந்து ஓமான் செல்ல நான்கு பேருந்து சேவைகள்: பஸ் ரூட் உட்பட கட்டண விபரங்கள் அனைத்தும் இங்கே…

ஐக்கிய அரபு அமீரகம் – ஓமான் இடையே விசா தொடர்பாகவும் சுற்றுலாவிற்காகவும் பல குடியிருப்பாளர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இவ்வாறு பயணம் மேற்கொள்பவர்களுக்கு அமீரகத்தில் இருந்து ஓமானுக்கு விமானத்தில் பயணிப்பதைக் காட்டிலும், தரை வழியாக பேருந்தில் பயணிப்பது உங்கள் செலவைக் கணிசமாகக் குறைக்கும்.

இரு நாடுகளுக்கும் இடையே குறைந்த செலவில் பயணிக்க விரும்பினால், சில பேருந்து சேவைகள் உங்களுக்கேற்ற பட்ஜெட்டில் வசதியான மற்றும் சிக்கனமான விருப்பத்தை வழங்குகின்றன. அமீரகத்தில் இருந்து ஓமானுக்கு பயணிக்க தேவையான பேருந்து விருப்பங்கள், கட்டணம், நேரம் மற்றும் ஆவணங்கள் போன்றவற்றைப் பின்வருமாறு பார்க்கலாம்:

ஷார்ஜா – மஸ்கட் பேருந்து சேவை:

ஓமானின் பொதுப் போக்குவரத்து நிறுவனமான Mwasalat, கடந்த மாதம் 27ஆம் தேதி ஷார்ஜா மற்றும் மஸ்கட்டை இணைக்கும் பேருந்து சேவையைத் தொடங்கியது. ஷார்ஜா மற்றும் மஸ்கட்டில் இருந்து ஷினாஸ் வழியாக ஒரு நாளுக்கு தலா இரண்டு சேவை என்ற கணக்கில் மொத்தம் நான்கு பயணங்கள் இயக்கப்படுகிறது.

Mwasalat இன் படி, பயணிகளின் செக்-இன் பேக்கேஜ் 23 கிலோ வரையிலும், 7 கிலோ ஹாண்ட் பேக்கேஜாகவும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. மேலும், டிக்கெட் கட்டணங்கள் 10 ஓமான் ரியால்கள் (95.40 திர்ஹம்ஸ்) மற்றும் 29 ஓமான் ரியால்கள் (276.66 திர்ஹம்ஸ்) இலிருந்து தொடங்குகிறது.

சேவை நேரம்:

ஷார்ஜாவில் இருந்து முதல் பேருந்து காலை 6.30 மணிக்கு அல் ஜுபைல் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2.30 மணிக்கு அஸைபா பேருந்து நிலையத்தை சென்றடையும்.

இரண்டாவது பேருந்து ஷார்ஜாவில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 11.50 மணிக்கு மஸ்கட்டை சென்றடையும். இதற்கிடையில், மஸ்கட்டில் இருந்து முதல் பேருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மாலை 3.40 மணிக்கு ஷார்ஜாவை சென்றடையும்.

இரண்டாவது பேருந்து மஸ்கட்டில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 1.10 மணிக்கு அல் ஜுபைல் பேருந்து நிலையத்தை சென்றடையும்.

ராஸ் அல் கைமா-முசந்தம்:

ராஸ் அல் கைமா போக்குவரத்து ஆணையத்தால் (RAKTA) முசந்தம் கவர்னரேட்டுக்கு இயக்கப்படும் பேருந்து சேவையானது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.

  • பயண நேரம் தோராயமாக மூன்று மணி நேரம்
  • ஒரு வழி பயணத்திற்கான டிக்கெட்டின் விலை 50 திர்ஹம்
  • RAKTA இன் அதிகாரப்பூர்வ இணையதளம், RAKBUS செயலி, பேருந்து அல்லது பேருந்து நிலையத்தில் உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.
  • வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி மற்றும் மாலை 6 மணிக்கு பேருந்து சேவை இயங்கும்

மேலும், இந்த சேவையானது ராஸ் அல் கைமாவில் உள்ள அல் தைத் தெற்கு (AlDhait South) பகுதியில் அமைந்துள்ள முக்கிய பேருந்து நிலையத்திலிருந்து முசந்தம் கவர்னரேட்டிற்குச் சொந்தமான காசாப் விலாயத்தில் (Wilayat of Khasab) முடிவடையும் மற்றும் எமிரேட்டில் அல் ராம்ஸ் மற்றும் ஷாம் பகுதி ஆகிய இரண்டு இடங்களிலும், முசந்தம் கவர்னரேட்டில் ஹார்ஃப், கதா, புகாவின் விலாயத் மற்றும் திபாத் ஆகிய இடங்களிலும் நிறுத்தம் செய்யப்படும்.

அபுதாபி-மஸ்கட்:

ஓமானின் பொதுப் போக்குவரத்து நிறுவனமான Mwasalat, அக்டோபர் 2023 இல் ஓமான் – அபுதாபி இடையே போக்குவரத்து சேவையை தொடங்கியது. இது அபுதாபியில் உள்ள அல் அய்ன் வழியாக மஸ்கட்டை இணைக்கிறது.

பேருந்துகள் மஸ்கட்டின் அஸைபா பேருந்து நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 3.40 மணிக்கு அபுதாபியை அடைகின்றன. அதேபோல்,  அபுதாபி நிலையத்திலிருந்து காலை 10.45 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.35 மணிக்கு அஸைபாவை அடைகின்றன.

லக்கேஜ் அலவன்ஸ் மற்றும் டிக்கெட் கட்டணம்:

  • ஓமானின் மஸ்கட்டில் இருந்து அபுதாபிக்கு ஒரு வழிப் பயணத்திற்கான டிக்கெட்டின் விலை 109 திர்ஹம்களாகும் (OMR11.5).
  • லக்கேஜ் அலவன்ஸ் – 23 கிலோகிராம் மற்றும் கைப்பையில் 7 கிலோகிராம் வரை எடுத்துச் செல்ல அனுமதி உண்டு.
  • பயண நேரம்: அபுதாபியிலிருந்து மஸ்கட் வரையிலான பயணத்திற்கு கிட்டத்தட்ட 5 மணிநேரம் வரை ஆகலாம்.
  • Mwasalat இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

துபாய் – மஸ்கட்:

துபாயிலிருந்து மஸ்கட்டுக்கு பேருந்து சேவை இயக்கப்படுகிறது. கொரோனா தொற்றுநோய்களின் போது Mwasalat இந்த பாதையை ரத்து செய்தாலும், அல் கான்ஜ்ரி போக்குவரத்து (Al Khanjry Transport) மூலம் குடியிருப்பாளர்கள் தினமும் இந்த பேருந்து சேவைகளைப் பெறலாம்.

  • ஆன்லைன் முன்பதிவு கிடையாது, ஆனால் ரூவி மற்றும் புர்ஜ் சஹ்வாவில் உள்ள அவர்களின் அலுவலகங்களில் நேரில் அல்லது வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யலாம்.
  • துபாயில் இருந்து மஸ்கட்  ஒரு வழி பயணத்திற்கு ஒரு நபருக்கு சுமார் 95 திர்ஹம் (10 ரியால்) வசூலிக்கப்படுகிறது.
  • துபாயில் உள்ள அல் கான்ஜ்ரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து தினமும் காலை 7, மதியம் 3 மற்றும் இரவு 9 மணிக்கு சேவை இயக்கப்படுகிறது.
  • பயணம் தோராயமாக 4-மணிநேரம் 35-நிமிடங்கள் இருக்கும் (இமிக்ரேஷன் செயல்முறையைத் தவிர்த்து) மற்றும் சுமார் 450 கி.மீ. தூரம் பயணமாகும்.

தேவையான ஆவணங்கள்

  • குறைந்தது ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
  • குறைந்தது ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடி
  • அமீரக குடியிருப்பாளர்கள் ஓமானுக்குள் நுழைவதற்கு, ஓமான் எல்லையில் விசா பெறலாம்

கட்டணம், விசா செலவுகள்

நாட்டை விட்டு வெளியேறும் குடியிருப்பாளர்கள் அமீரக எல்லையில், எக்ஸிட் கட்டணம் 36 திர்ஹம்ஸ் செலுத்த வேண்டும். ஓமான் எல்லையில் 50 திர்ஹம்ஸ் செலுத்தி ஓமான் விசாவைப் பெறலாம்.

சிங்கிள்-என்ட்ரி விசிட் விசா கொண்ட அமீரக சுற்றுலாப் பயணிகளுக்கு:

  • பயணத்திற்கு முன் ஓமான் விசிட் விசா பெற வேண்டும்
  • அமீரகத்திற்குத் திரும்புவதற்கு, ஓமானில் இருக்கும்போது விசா விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் மற்றும் திரும்பும் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் பெறப்பட வேண்டும்.

மல்ட்டிப்பிள் என்ட்ரி விசிட் விசாக்கள் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு:

  • புறப்படுவதற்கு முன் ஓமான் விசா தேவை.
  • இந்த விசா மூலம் நாட்டிற்குள் மீண்டும் நுழைவதை எளிதாக்கலாம். இருப்பினும், ஓமான் நாட்டுக்குள் நுழைவதற்கு அவர்களின் பாஸ்போர்ட் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாக வேண்டும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!