UAE: சாலையில் திடீரென வாகனம் நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட விபத்து.. அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்..!! வீடியோவை வெளியிட்ட காவல்துறை..!!

சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் முறையாக போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தையும் மீறினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அவ்வப்போது குடியிருப்பாளர்களுக்கு அபுதாபி காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர். அதன் வரிசையில் தற்போது ஒரு புதிய வீடியோவை அபுதாபி காவல்துறை வெளியிட்டுள்ளது.
மேலும் அபுதாபி காவல்துறை வெளியிட்ட வீடியோவில், சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்தியதால் ஏற்பட்ட பயங்கரமான வாகன விபத்து குறித்து ட்வீட் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் கார் சட்ட விரோதமாக சாலையின் நடுவே வேகத்தை குறைத்து நடுரோட்டில் திடீரென நிறுத்துவதை காட்டுகிறது. இதனால் இந்த காரின் மீது பின்னே வந்து கொண்டிருந்த ஒரு பெரிய வேன் மோதுகிறது. அப்போது வேன் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரண்டாவது கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகிறது.
#فيديو | بثت #شرطة_أبوظبي بالتعاون مع مركز المتابعة والتحكم وضمن مبادرة “لكم التعليق” فيديو لخطورة التوقف في وسط الطريق والانشغال أثناء القيادة. #درب_السلامة #لكم_التعليق#الانشغال_بغير_الطريق pic.twitter.com/QVc5QKXNn3
— شرطة أبوظبي (@ADPoliceHQ) September 2, 2022
இதனைத் தொடர்ந்து அபுதாபி போக்குவரத்து மற்றும் ரோந்துப் பிரிவு காவல்துறை இயக்குநரகம் எக்காரணம் கொண்டும் சாலையின் நடுவில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளது. சாலையில் வரும் மற்றவர்களைப் பாதுகாக்க, வாகன ஓட்டிகள் பாதுகாப்பான இடத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஒருவேளை வாகனத்தை நகர்த்த முடியாத பட்சத்தில், ஓட்டுனர் படையின் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு ஆதரவைப் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் போக்குவரத்துச் சட்டத்தின்படி, வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும் போது தொலைபேசியைப் பயன்படுத்தினால் அல்லது சாலையில் கவனத்தை சிதறடித்தால் அவர்களுக்கு எதிராக 800 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் மற்றும் நான்கு கருப்பு புள்ளிகள் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர்கள் தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துதல், மற்ற பயணிகளுடன் பேசுதல், புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட எந்தவொரு கவனச்சிதறல் நடத்தைகளிலும் பங்கேற்க வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.